கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடல்
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைவாக கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ கே.காதர் மஸ்தான் அவர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(27) மு.ப 10.30மணிக்கு மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை உள்ளடக்கியதாக கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழு, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழு, வாழ்வாதார அபிவிருத்திக் குழு, உள்நாட்டு உற்பத்திக் கைத்தொழில்களை முன்னேற்றவதற்கான அபிவிருத்திக் குழு ஆகிய நான்கு குழுக்கள் ஊடாக இத் தேசிய நிகழ்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுத்துச் செல்லப்படும் இச் செயற்றிட்டத்தில் நான்கு குழுக்களில் உள்ளடக்கப்படுகின்ற அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தொடர்பாக திட்டமிடல் பணிப்பாளர் அவர்கள் விளக்கமளித்தார். கல்வித்துறை, போக்குவரத்து, சுகாதாரம், நீர்ப்பாசனம், மேச்சல் நிலம், விளையாட்டுத்துறை, மற்றும் திணைக்களங்களில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளன. இவற்றை உள்ளடக்கியதாக திணைக்களங்கள் இச் செயற்றிட்டத்திற்காக திட்டவரைபொன்றை தயாரிப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் நீண்ட காலங்களாக இடமாற்றம் கிடைக்காது பணியாற்றிக்கொண்டிருக்கின்ற உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கௌரவ மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், இச் செயற்றிட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ள திணைக்கள பணிப்பாளர்கள் மற்றும் உதவிப்பணிப்பாளர்கள் என பல்வேறு தரப்பட்டேர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்துகொண்டனர்.