மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த போப் பிரான்சிஸ்.

உலக நாடுகளில் உள்ள 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவராகப் போற்றப்படும் போப் பிரான்சிஸின் நல்லுடல் அவருக்குப் பிடித்தமான செண்டா மரியா மஜ்ஜியோரி தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வத்திகனின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) 50 நாட்டுத் தலைவர்கள், 10 மன்னர்கள் உட்பட 250,000க்கும் அதிகமானோர் போப் பிரான்சிஸுக்குத் தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்த வெள்ளமெனத் திரண்டனர்.
அமைதிக்கான அறிகுறியாக கூட்டத்தில் உள்ளோர் அருகில் உள்ளோருடன் கை குலுக்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் உள்ளிட்ட சிலருடன் கை குலுக்குவதைக் காண முடிந்தது.
மாலை சுமார் 6.20 மணிக்கு இறுதிச்சடங்கு முடிந்து போப் பிரான்சிஸின் நல்லுடல் செண்டா மரியா மஜ்ஜியோரி தேவாலயத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது.
வத்திகன் நகரிலிருந்து திபெர் ஆற்றைக் கடந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாலயத்தை நல்லுடல் சென்றடைந்தது. போப் பிரான்சிஸின் இறுதி ஊர்வலத்தில் வழிகாட்டவும் மருத்துவ உதவிகளோடு தண்ணீர் கொடுக்கவும் ஏறக்குறைய 3,000 தொண்டூழியர்கள் வழியருகே நிறுத்தப்பட்டனர்.
இதற்குமுன் மறைந்த போப் தலைவர்கள் வத்திகனில் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். 100 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு போப் வத்திகனில் அடக்கம்பண்ணப்படாமல் வேறொரு தேவாலயத்தில் அடக்கம்பண்ணப்பட்டார்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் 12 ஆண்டுகள் போப் தலைவராகச் சேவையாற்றினார். ஏப்ரல் 21ஆம் தேதி பக்கவாதத்தால் 88 வயதில் அவர் இயற்கை எய்தினார்.