ஜம்மு-காஷ்மீரில் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

ஜம்மு – காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தெற்கு காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகளின் வீடுகள் வெள்ளிக்கிழமை இரவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

இந்தநிலையில், இதுவரை மொத்தம் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் ஹுசைன் தோகெர், ஸாகிர் அஹ்மத் கானாய், ஆமிர் அஹ்மத் தார், ஆசிஃப் ஷேக், ஷாஹித் அஹ்மத் குட்டே, ஆஹ்சன் உல் ஹக் ஆமிர், ஜெய்ஷ்-இ-முஹம்மத்தை சேர்ந்த ஆமிர் நஸீர் வானி, ஜமீல் அஹ்மத் ஷேர் கோஜ்ரி, போராளிகள் முன்னணி(தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்) இயக்கத்தைச் சேர்ந்த அத்னான் சஃபி தார் மற்றும் ஃபரூக் அஹ்மத் தெத்வா ஆகியோரின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.