தமிழ் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையை கடுகளவேனும் சீர்குலைக்கப்போவதில்லை! – புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி அநுர சத்தியம்.

ாதுகாப்புக் காரணங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரசு கையகப்படுத்திய அனைத்து காணிகளையும் மிக விரைவில் விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையைக் கடுகளவேனும் சீர்குலைக்கப் போவதில்லை.”
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“காணிகளை விடுவித்து மக்கள் விவசாயம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொடுக்க அரசு தயாராக இருக்கின்றது.
நாம் சிங்கள மக்களுடன் அதிகளவில் நெருங்கிப் பழகுகின்ற போதிலும் அவர்கள் மத்தியில் அதிகளவில் பொதுக் கூட்டங்களை நடத்திய போதிலும் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையைக் கடுகளவேனும் சீர்குலைக்கப் போவதில்லை.
எனவே, மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையைப் பலப்படுத்தும் செயற்பாடுகளையே எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளோம்.
எமது அரசின் செயற்பாடுகளால் எமக்கு வாக்ககளிக்காத மக்களிடமிருந்தும் எம் மீது நம்பிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தி அரசின் முதலாவது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்படும். அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.
நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தில் பங்குகொள்ளுமாறு புலம்பெயர் தமிழர்களை அழைக்கின்றோம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற இனவாத அரசியல் இனியும் எமக்கு வேண்டாம்.
கடந்த காலங்களில் அனைத்து சலுகைகளையும் அமைச்சர்களும், ஜனாதிபதிகளுமே பெற்றுக்கொண்டனர்.
பொதுமக்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை.
நாங்கள் கொள்ளையடிக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இதுவரை திருடியவர்கள் குறித்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றீர்கள் எனக் கேட்கின்றனர்.
கண்டிப்பாக அவர்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி தண்டனை பெற்றுத்தருவோம்.
தற்போது பல்வேறு மாகாணங்களில் உள்ள அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வருகின்றனர்.” – என்றார்.