முதுகெலும்பே இல்லாத தேர்தல் ஆணையம் இது! – சுன்னாகம் கூட்டத்தில் சுமந்திரன் சாட்டை.

“தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே காவல் படை, பொலிஸ் முழுவதும் தேர்தல் ஆணைக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும் என அரசமைப்புச் சொல்கின்றது. ஆனால், இங்கே தேர்தல் செயலக அதிகாரிகளைக் காவல் படையினர் தடுக்கின்றனர்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சுன்னாகம் பகுதியில் நேற்று வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்குகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் வேட்பாளர் தியாகராஜா பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் உரையாற்றுகையில்,
“தேர்தல் கூட்டங்களில் தேர்தல் இலஞ்சம், முறையற்ற அழுத்தம் என்பன தொடர்மில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால், ஆணைக்குழு எதுவும் செய்கின்றதாக இல்லை.
பிரதமர் ஹரிணி அமரசூரிய இங்கே வந்தபோது கோயில் வளாகத்திலே தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெறுகின்றது எனச் சொல்லி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தபோது (இதனை ஆணைக்குழுவுக்குச் சொல்கின்றேன்) தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் அங்கே போனார்கள். போனவர்களைப் பிரதமரின் காவலாளிகள் உள்ளே போக விடவில்லை.
இதனால் திரும்பி வந்து விட்டீர்கள். நீங்கள் என்ன ஆணைக்குழு? உங்களையா நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவென்று அரசமைப்பையும் திருத்தி, உங்களுக்கு இத்தனை அதிகாரங்களையும் கொடுத்து வைத்திருக்கின்றோம்?
ஆணைக்குழுவுக்கு முதுகெலும்பு இருந்தால் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அதிகாரம் இருக்கின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே காவல் படை, பொலிஸ் முழுவதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும் எனச் சட்டம் சொல்கின்றது – அரசமைப்புச் சொல்கின்றது. ஆனால், அந்த அதிகாரத்தையும் பாவிக்காமல் சுயாதீன ஆணைக்குழு என்று ஒரு பெயரையும் சூட்டி வைத்துக்கொண்டு எந்தவித சுயாதீனமும் கிடையாது. இங்கே மிக முறையற்ற விதத்திலே பரப்புரைகள் எல்லாம் நடக்கின்றன. அதைத் தட்டிக் கேட்க அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை.
அரசு இத்தனை காலமும் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஊழலுக்கு எதிரானவர்கள் என்றனர். ஆனால், தற்போது அப்பட்டமாகவே தெரிகின்றது. நாம் நினைத்தோம் ஒரு இரண்டு வருடம் தேவையாக இருக்கும், கோட்டபாய அரசைப்போன்று இரண்டு ஆண்டுகள் தேவை என்று. ஆனால், இவர்களுக்கு இரண்டு வருடங்கள் கூடத் தேவையில்லை. ஆறு மாதங்களிலேயே சிவப்புச் சாயம் வெளுத்து விட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் பக்கம் செல்லக்கூடாது என்ற அடிப்படைப் பொருளாதாரக் கொள்கையைக் கொண்ட இந்தத் தேசிய மக்கள் சக்தி அரசு, தற்போது ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் செய்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இந்த ஒப்பந்தத்தில் இருந்த பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினோம். தேசிய மக்கள் சக்தியினரும் கண்டித்திருந்தனர்.
ரணில் அரசு உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்காக ஊழியர் சேபலாப நிதியைக் கையாண்டமை தொடர்பில் இன்று அரசில் பிரதி அமைச்சராக இருக்கின்ற ஒருவர் அன்று நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நான் அவருக்குச் சட்டத்தரணியாக ஆஜராகியிருந்தேன். அவர்கள் ஆட்சிக்கு வந்தபின் இப்போது எதையும் மாற்றவில்லை. ரணில் விக்கிரமசிங்க செய்த ஒப்பந்தத்தையே தொடர்கின்றனர்.
அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவே இது எல்-போர்ட் அரசு என்கிறார். எங்களுடைய கட்சி சார்பில் உள்ளூராட்சி சபையைக் கைப்பற்றப் போகின்றவர்கள் எல்-போர்ட் அரசியல்வாதிகள் அல்லர். எங்களிடம் அனுபவம் வாய்ந்த தவிசாளர்கள் இருக்கின்றார்கள்.
எல்-போர்ட் அரசியல்வாதிகள் என்றால் யார் என்பதை தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அவதானித்தால் புரியும். அதில் வைத்தியர் ஒருவர் இருக்கின்றார். அவர் வாயைக்கூட திறப்பதில்லை. மற்றைய இரண்டு எம்.பிக்களும் இனிமேல்தான் பேசுவதற்குப் பழக வேண்டும். சபையில் மக்களுடன் எவ்வாறு பேச வேண்டும் என்பதை அறியாதவர்கள். அமைச்சர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் “சும்மா இருடா” என்கிறார். அவர்கள் சொல்வது எங்களுக்கும் புரியவில்லை. அவர்களுக்கும் புரியவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. அது யாழ்ப்பாணம் மக்களுக்குத். தற்போது தெளிவாகத் தெரிகின்றது. கல்விக்குப் பெயர் போன யாழ்ப்பாணத்திலிருந்து இவ்வாறான பிரதிநிதிகள் நாடாளுமன்றம் சென்றிருக்கின்றார்கள். எனினும், அதனைத் திருத்தியமைப்பதற்கான சந்தர்ப்பம் உடனடியாகவே உள்ளூராட்சி சபைத். தேர்தலிலேயே கிடைத்திருக்கின்றது.
ஜனாதிபதி ஊழலை ஒழிப்போம் என்று கூறிவிட்டு, வேறு கட்சிகள் ஆட்சியமைத்தால் பத்து தடவைகள் சிந்தித்தே நிதி வழங்குவோம் என்கிறார். ஊழல்வாதிகளுக்குப் பணம் கொடுக்க மாட்டோம் என்கின்றனர். இங்கு யார் ஊழல் செய்தது? தமிழரசுக் கட்சியின் ஆளுகையின் கீழ் இருந்த எந்தச் சபையிலாவது ஊழல் இடம்பெற்றதா?
தேசிய மக்கள் சக்தி நியமித்த சபாநாயகர் போல் எங்கள் கட்சி ஊழல் செய்யவில்லை. இன்று வரை சபாநாயகரின் கல்வித்தமை வெளிப்படுத்தப்படவில்லை. பொய்யான கல்வித்தகமையைக் காட்டி சபாநாயகரானார். பின் அவருடைய கல்வித் தகைமை சவாலுக்கு உட்படுத்தப்பட்டவுடன் பதவி விலகுவதாகச் சொன்னார். ஆறு மாதங்களாகிவிட்டன. இன்னமும் பட்டச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை. ஜனாதிபதியிடம் நேரடியாகவே கேட்கின்றேன் இங்கு யார் ஊழல்வாதி? உங்களுடைய கட்சியிலிருந்து நீங்கள் தெரிவு செய்த சபாநாயகர் ஊழல்வாதியா? இல்லையா? அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குங்கள்.
நீதிமன்றில் இருந்து களவு வழக்கிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு எங்களுக்கு அநுர பிரசங்கம் செய்கின்றார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 25 சதவீதமான வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியினர் 3 ஆசனங்களைப் பெற்றிருந்தார்கள். அந்த அசம்பாவிதம் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் நிகழக்கூடாது என்பதற்காக ஏனைய தமிழ்க் கட்சிகளை விமர்சிப்பதில்லை என்று தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளோம்.
நாங்கள்தான் பெரிய தமிழ்க் கட்சி. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தாலும் இந்த உதிரி தமிழ்க் கட்சிகளை நாங்கள் விமர்சிக்கப்போவதில்லை. ஆனால், அந்தக் கட்சிகள் என்னையே தாக்குகின்றன. இதைவிடுத்து எங்கள் இனத்துக்கு ஆபத்தாக மாறியிருக்கின்ற அரச கட்சியை விமர்சியுங்கள்.
இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியானது 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்து. தற்போது 159 ஆசனங்களுடன் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றார்கள். பழைய ஊழல் அரசியல்வாதிகளை விரட்ட வேண்டும் என்ற மக்கள் மனதில் இருந்த ஆதங்கத்தின் பலனை இவர்கள் அடைந்திருக்கின்றார்கள். கோட்டாபய துரத்தியடிக்கப்பட்டது போல் இவர்களும் மிக விரைவில் துரத்தியடிக்கப்படுவார்கள்.
நாடு யாருடனும் இருக்கட்டும். நம் ஊர் நம் வீட்டோடு இருக்கட்டும். அதை விட்டுக்கொடுக்க முடியாது. 75 வருடங்களாக சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வைக் கோரிய தமிழினம் உள்ளூர் அதிகார சபை அதிகாரத்தை மத்திய அரசிடம் கொடுப்பது சரியா? அதன் பின் எங்களுடைய சமஷ்டிக் கோரிக்கை என்னவாகும்? இந்த அபாயத்தை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். மக்கள் தொடர்ந்தும் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
இறைமையைப் பிரயோகிக்கும் முதல் படியில் தெளிவாக மக்கள் வாக்களிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெற்ற அசம்பாவிதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இடம்பெற்றுவிடக்கூடாது. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.” – என்றார்.