கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் அலுவலகம் மற்றும் பினராயி விஜயனின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று(திங்கள்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கேரள முதல்வரின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது பிற்பகல் 2 மணிக்கு வெடிக்கும் என்றும் தகவல் வந்துள்ளது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் பின்னர் நிபுணர்கள் சோதனை செய்ததில், அது புரளி என்றும் தெரிய வந்தது.
அதேபோல திருவனந்தபுரம் ரயில் நிலையம், விமான நிலையங்களுக்கும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக காவல்துறையினர் 5 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.