கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல் வலையமைப்பு செயலிழப்பு! சி.டி., எம்.ஆர்.ஐ. பரிசோதனைகளுக்கு திகதி வழங்குதல் நிறுத்தம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல் வலையமைப்பு (PAC System) கடந்த 2 வாரங்களாக செயலிழந்துள்ளதுடன், சி.டி. (CT) மற்றும் எம்.ஆர்.ஐ. (MRI) பரிசோதனைகளுக்கான திகதி வழங்குதலும் நிறுத்தப்பட்டுள்ளதாக இணைந்த சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை தேசிய வைத்தியசாலையில் தகவல் வலையமைப்பு நிறுவப்பட்டதாகவும், அந்த அமைப்பு நிறுவப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் கதிர்வீச்சு பரிசோதனைகள் (CT, MRI) உள்ளிட்ட நோயறிதல் சேவை தொடர்பான அனைத்து கதிர்வீச்சு பரிசோதனைகளின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அந்த அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பு நிறுவப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கதிர்வீச்சு பரிசோதனைகளின் புகைப்படங்கள் கதிர்வீச்சு ஒளிப்படத்தகடுகளில் அச்சிட்டு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த அமைப்பை நிறுவுவதன் மூலம் தகவல்களை இலக்கமுறைப்படுத்துதல் மற்றும் ஒளிப்படத்தகடுகளுக்காக செலவிடப்படும் அதிகப்படியான செலவை நிறுத்துதல் போன்ற அடிப்படை விடயங்கள் எதிர்பார்க்கப்பட்டதாகவும், உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த அமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கியுள்ளதாகவும் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

சர்வதேச நிலைமை இவ்வாறிருக்க, இந்த அமைப்பை உருவாக்கும் ஆரம்ப கட்டத்திலிருந்தே அந்த நடவடிக்கை எந்தவித வெளிப்படைத்தன்மையுமின்றி மேற்கொள்ளப்பட்டதை தொழில்முறை குழுக்கள் என்ற வகையில் தாங்கள் அடிக்கடி கேள்வி எழுப்பியதாகவும் இணைந்த சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் கூறினார். இது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளை அப்போதைய ஆட்சியாளர்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், தங்களுக்குத் தேவையான குழுக்களைப் பயன்படுத்தி தகுதியற்ற மற்றும் அத்தியாவசிய தொழில்முறை குழுக்களை புறக்கணித்து இந்த அமைப்பு நிறுவப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தற்போது இரண்டு வாரங்களாக இந்த அமைப்பு சேவையை முழுமையாக நிறுத்தியுள்ளதாகவும், அதற்கு காரணம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாதது மற்றும் தகவல் அமைப்பின் வலையமைப்பின் தரவு சேமிப்பகம் முழுமையாக நிரம்பியிருப்பது எனவும் அவர் கூறினார்.

ஆரம்பத்தில் அதிக செலவு செய்து வருடாந்த பராமரிப்புக்காகவும் அதிக செலவு செய்ய வேண்டிய இந்த அமைப்பு தற்போது வெள்ளை யானையாக மாறியுள்ளதாகத் தெரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று நோயாளிகளுக்கு (CT மற்றும் MRI) பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான திகதி வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளதுடன், நோயாளிகளின் பரிசோதனைகளை மேற்கொள்வது பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள நிலைமையில் நோயாளிகளின் பரிசோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு தேவையான சூழலை முன்பு போலவே உருவாக்க முடியும் எனவும், அதற்கு சுகாதார அமைச்சர், செயலாளர் அல்லது சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் தலையிட்டு தேவையான தரப்பினரை அழைக்க வேண்டும் எனவும் இணைந்த சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.