சீன உர கப்பல் விவகாரம்: முன்னாள் உயர் அதிகாரி கைது

2021 ஆம் ஆண்டு சீனாவின் Qingdao Seawin Biotech நிறுவனத்திடம் இருந்து சேதனப் பசளை (organic fertilizer) இறக்குமதி செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி தொடர்பில் விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மஹேஷ் கம்மன்பில கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் (Bribery Commission) விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
தரமற்ற சேதனப் பசளை அடங்கிய கப்பல் சீனாவில் உள்ள Qingdao Seawin Biotech நிறுவனத்திடம் இருந்து அனுப்பப்பட்டமைக்காக கடன் கடிதம் (Letter of Credit) திறக்க முன்னாள் மேலதிக செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்மூலம் முதலாவது கப்பலுக்கான தொகையில் 75 சதவீதமான 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட மஹேஷ் கம்மன்பில கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.