தெற்காசியா: வெடிக்கத் தயாராகும் பதட்டம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பிரிக்கும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து மூன்றாவது இரவாக துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளதாக இந்திய ராணுவத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு “மிகக் கடுமையான பதில் கிடைக்கும்” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தங்களை குறிவைத்து கூறப்படும் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிப்பதாகவும் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
சுதந்திரமான விசாரணைக்கான பாகிஸ்தானின் கோரிக்கை அமைதிக்கான பாகிஸ்தானின் விருப்பத்தை காட்டுவதாகவும், அதை இந்தியா பலவீனமாக கருதக்கூடாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார். இந்த விசாரணையில் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு ஒரு பங்கு வகிக்க முடியும் என்றும் பாகிஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் அதிகாரிகள் காஷ்மீரில் மேற்கொண்ட ஒடுக்குமுறையை காஷ்மீர அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர்.
பாதுகாப்புப் படைகள் “பயங்கரவாதிகள்” மற்றும் பொதுமக்கள் இடையே வேறுபாடு காண வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி கூறினார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ருஹுல்லா மெஹ்தி, காஷ்மீரும் காஷ்மீர் மக்களும் “கூட்டுத் தண்டனைக்கு” ஆளாகி வருவதாகக் கூறினார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணையை தற்போது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற சிக்கலான விசாரணைகளை மேற்கொள்வதில் அந்த அமைப்பு அனுபவம் மற்றும் தொழில்நுட்பம் கொண்டதாகும்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் காஷ்மீர் முழுவதும் குறைந்தது ஒன்பது வீடுகளை இந்திய ராணுவம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. இந்திய ராணுவத்தின் இந்த நடத்தை காஷ்மீர் மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் கண்டனத்துக்கும் உள்ளாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் காட்டுகின்றன.
“இவை உள்ளூர் மக்களுக்கு தண்டனை வழங்கும் இஸ்ரேலின் தந்திரோபாயங்கள். அப்பாவி குடும்பங்களின் தவறு என்ன? வீடுகள் போராளிகளுக்கு சொந்தமானவை அல்ல. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய பின்னர், அவர்கள் தங்கள் குடும்பங்களையும் விட்டுச் சென்றுவிட்டனர்,” என்று குப்வாரா எல்லை மாவட்டத்தின் சந்தேகிக்கப்படும் லஷ்கர்-இ-தொய்பா போராளியான ஃபாரூக் டீட்வாவின் உறவினர் அல் ஜசீராவிடம் கூறினார். அவரது குடும்ப வீடு நேற்று (26) பாதுகாப்புப் படையினரால் தகர்க்கப்பட்டது. ஃபாரூக் டீட்வா 1990 களில் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றவர். அவரது குடும்பத்தினர் கூறியபடி அவர் ஒருபோதும் திரும்பி வரவில்லை.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள முரான் கிராமத்தில், இந்திய ராணுவம் சந்தேகிக்கப்படும் அஹ்சன் ஷேக்கின் வீட்டை தகர்த்தபோது குறைந்தது 12 வீடுகள் சேதமடைந்ததாக அப்பகுதிவாசிகள் அல் ஜசீராவிடம் தெரிவித்தனர். அவரும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
“நாங்கள் மசூதியில் இஷா [மாலை] தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது அவர்கள் எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டை தகர்த்தனர். எங்கள் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் ஒரு டஜன் வீடுகள் சேதமடைந்தன. எங்கள் தவறு என்ன? இப்போது என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று வெடிவிபத்தில் சேதமடைந்த வீட்டின் குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
“அவர்கள் எங்கள் அண்டை வீட்டாராக இருப்பது குற்றச் சதிக்கு காரணமல்ல…”
பாகிஸ்தானுடனான பதட்டங்களுக்கு மத்தியில் இந்திய கடற்படை “தயார்நிலையை காட்ட” பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த தெற்காசியாவும் வெடிக்கத் தயாராகும் வெடிகுண்டு மீது நிற்கிறது.