எதிர்பார்த்த முன்னேற்றம் நடைமுறையில் இல்லை! – வடக்கு மாகாண ஆளுநர் விசனம்.

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை ஒதுக்கிய திட்டங்களுக்கு உரிய காலப்பகுதிக்குள் செலவு செய்து முடிக்க வேண்டியது பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.
திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தி முடிக்காமல் அதற்குச் சாட்டுப்போக்குச் சொல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “நடப்பு ஆண்டின் மூன்றிலொரு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் திட்டங்களின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லாமல் உள்ளது.
எமது மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகச் செலவு செய்வதுடன் அடுத்த ஆண்டு அதிகளவு நிதியைக் கோரவேண்டும்.
அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களது தலைமைத்துவத்தில்தான் இந்தத் திட்டங்களின் நடைமுறையாக்கத்தின் வெற்றி தங்கியிருக்கின்றது.
கடந்த மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததைப்போல திட்டங்களின் நடைமுறையாக்கங்களை செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிடுவதுடன், இரு வாரங்களுக்கு ஒரு தடவை மீளாய்வுக் கூட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திட்டங்களுக்கான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்யும்போது அவதானம் தேவை. குறைந்த விலையில் கேள்விகூறலைச் சமர்பித்து ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதை நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிடுவார்கள்.
தவறிழைக்கும் ஒப்பந்தகாரர்களைக் கறுப்புப் பட்டியலில் உள்வாங்க வேண்டும் என்பதைப் பல தடவைகள் சொல்லியுள்ளேன். அதை நடைமுறைப்படுத்த வேண்டியது பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவைகளின் பொறுப்பு. அதைச் செய்வதன் ஊடாகவே எதிர்காலத்திலாவது பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.” – என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி எஸ்.குகதாசன், நிதி முன்னேற்றம் தொடர்பில் ஒவ்வொரு அமைச்சுக்கள், திணைக்களங்கள் ரீதியாகத் தெரியப்படுத்தினார்.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிய அவர், கட்டுநிதி விடுவிப்புத் தொடர்பில் தாமதங்கள் ஏதுமில்லை எனக் குறிப்பிட்டார். அதேபோல் மாகாணத்துக்கு எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் உரியவாறு காலாண்டுக்குரியது கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள நிலையான வைப்பு நிதியை அந்தப் பிரதேசங்களின் சிறிய அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாகாணத்தின் நிதியை வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
நிரல் அமைச்சுக்கள் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தால் நிதியை விடுவிக்கத் தயாராகவுள்ள நிலையில் தேவையான திட்டங்களைச் சமர்பித்து நிதியைப் பெற்று நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
இதன் பின்னர் திட்டங்களின் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் எம்.கிருபாசுதன் ஒவ்வொரு அமைச்சுக்கள், திணைக்களங்கள் ரீதியாகத் தெளிவுபடுத்தினார்.
2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் நிதிக்கூற்று அறிக்கை புத்தகம் இந்தக் கூட்டத்தில் வைத்து வடக்கு மாகாண ஆளுநரிடம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை, இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில், வடக்கு மாகாணத்தில் தற்போது முருங்கை மற்றும் மாம்பழச் செய்கையில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அது தொடர்பில் ஆராய்ச்சிகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஆளுநர், புதிய இனங்களை அறிமுகப்படுத்தும்போது பாரம்பரிய இனங்களை அழிவடையாமலும் பார்த்துக்கொள்வது விவசாயத் திணைக்களத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.