சஜித்தை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்! – ஹர்ஷன ராஜகருணா எம்.பி. தெரிவிப்பு.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வென்ற பின்னர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

‘எதிர்வரும் டிசெம்பர் மாதம் சஜித்தை ஜனாதிபதியாக்கும் வகையில் நகர்வுகள் இடம்பெறுகின்றன’ என்று வெளியாகும் தகவல்கள் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த பெறுபேற்றை பெற்ற பின்னர் கூடிய விரைவில் சஜித்தை ஜனாதிபதியாக்குவதற்கே முயற்சிக்கின்றோம். மாதக் கணக்கு என்பது முக்கியம் அல்ல. அடுத்த மாதம் ஜனாதிபதி பதவிக்கு அவரை கொண்டுவர முடிந்தால்கூட அதனைச் செய்வோம்.

எனினும், அதற்கென நடைமுறைகள் உள்ளன. பலவந்தமாக ஆட்சியை பிடிக்க முடியாது. நாட்டு மக்கள் உணர்ந்த பின்னர், மக்களின் விருப்பத்தின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி அரியணையேறும்.

அநுர அரசு வெறும் ஏழு மாதங்களில் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. தவறு நடந்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்து, அதனை சரிசெய்வதற்கு முற்படுவார்கள். எனவே, மக்களின் நம்பிக்கையுடனும் ஆசியுடனும் ஜனாதிபதியாக சஜித் தெரிவாகுவார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.