ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மீளாய்வு சாதகமாகக் கருத்தில் கொள்ளப்படும்! – அநுரவிடம் ஐரோப்பிய ஒன்றியக் குழு உறுதி.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவுக்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே சார்ல்ஸ் வைட்லி இவ்வாறு கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, வர்த்தக ரீதியான பல வெற்றிகளை அடைய உதவியுள்ளது என்றும், தொடர்ந்தும் வர்த்தக வெற்றிகளை அடைய இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தரப்படுத்தப்பட்ட மற்றும் தரமான பொருட்களை விநியோகிக்க இலங்கைக்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய தலைவர் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்க, கருத்தில் கொள்ளப்படும் அளவுகோல்கள் தற்போதைய அரசின் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் சார்ல்ஸ் வைட்லி குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை அல்லது பொதுவான விருப்பத்தேர்வு முறை தொடர்பான 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்தியிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதார ரீதியில் சரிவடைவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் அரசியல் முறையும், வீண்விரயமும், மோசடியுமே காரணமாக அமைந்திருந்ததாகவும், இப்போது நாடு மீண்டும் சரியான நிர்வாகத்தைக் கொண்டதாக மாற்றப்பட்டு வருவதாகவும், அதற்கு சிறிது காலம் அவகாசம் அவசியம் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தற்போதைய அரசின் மீது ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இலங்கையில் முன்னைய அரசுகள் தெற்கு சிங்கள வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டன. ஆனால், இம்முறை வடக்கின் தமிழ் மக்கள், கிழக்கு முஸ்லிம் மக்கள் மற்றும் தெற்குச் சிங்கள மக்களும் தற்போதைய அரசை உருவாக்க ஆதரவளித்தனர் என்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரெனோ, வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஜெனரல், கொள்கை அதிகாரி கைடோ டோலாரா, ஐரோப்பிய பிரத்தியேக நடவடிக்கை சேவையின் இலங்கை அதிகாரி கலிஜா அகிஷேவா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.