யாழ். மாநகர சபை உறுப்புரிமைக்கு எதிரான மணிவண்ணன் வழக்கு மீதான கட்டளை நாளை
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விண்ணப்பம் மீதான கட்டளை நாளை வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாவட்டம் நீதிமன்றம் தவணையிட்டது.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்ந்து அனுப்பப்பட்ட வி.மணிவண்ணன், தமது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக்கொண்டது.
அதனடிப்படையில் வி.மணிவண்ணன் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் அவருக்கு அறிவிக்கப்பட்டது.
தனது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சிறப்பு மனுவைத் தானே தாக்கல் செய்தார் .
மனுவின் பிரதிவாதிகளாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸுன் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்ட நான்கு தரப்பினரை மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
தனது பதவி நீக்கத்தை சட்ட வலுவற்றதாக உத்தர விடுமாறு கோரிய மனுதாரர், அதன் மீதான விசாரணை நிறைவடைந்து இறுதிக் கட்டளை வரும் வரை இடைக்காலத் தடைக் கட்டளையை வழங்குமாறும் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமக்கமலன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
மனுதாரரின் விண்ணப்பம் தொடர்பில் ஆராய்ந்து நாளை புதன்கிழமை கட்டளை வழங்கப்படும் என்று நீதிபதி தவணையிட்டார்.