கண்மணியே பேசு…
கண்மணியே பேசு…
பசுத்தோல் போர்த்திய புலியினால் மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருத்தியின் வாழ்வியல் சம்பவங்களின் கோர்வையாய் ‘கண்மணியே பேசு’ வெளிவருகிறது. இதில் வருகின்ற அனைத்து சம்பவங்களும் அவளின் முழு சம்மதத்துடனும் தொடர் கதையாய் எழுதவிருப்பதால் இன்று இதன் ஆரம்பத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். இது பாதிக்கப்பட்ட அல்லது இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஏனைய பெண்களுக்கு ஒரு வடிகோலாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வழி சமைக்கட்டும்.
-
பாகம் இரண்டு -கோதை
–
வழமையான காலை நேர நடைப்பயிற்சி. தேம்ஸ் நதிக்கரை ஓரம் இளவேனிலின் குளிரும் வெயிலும் கலந்து அவளை இதமாக ஸ்பரித்துக் கொண்டிருந்தது. செம்மஞ்சள் கலந்த பூக்களினால் இலைகள் முழுவதும் மறைந்து போன மரங்களில் தாய்மை பூரணத்துவம் அடைந்திருந்தது. மனிதர்கள் நடமாட்டம் குறைந்திருந்த அந்த அத்துவான பகுதியில் அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வாழ்க்கையில் அவள் தன் பாதையை முன்னெடுத்துச் செல்வது போல ஒரு உணர்வு அவளுக்குள் தோன்றி மறைந்தது. முகத்தில் தோன்றிய இயல்பான, களங்கமெதுவுமில்லாத அந்தப் புன்னகையில் அவளையறியாமலே அவள் மனமும் குதூகலித்துக் கொண்டது.
” ஹேய் இனிய காலை வணக்கம்!’ குரல் வந்த திசையில் திகைத்துப் போய் திரும்பியவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.
‘ காலை வணக்கம்!’ அவசரமாகச் சொல்லியபடியே, இரண்டு வாரங்களின் முன் தன்னை நையாண்டி பண்ணிய அதே கழுதை என அவள் நினைவை மீட்டுக் கொண்டாள்.
‘ அண்டைக்கு பெயர் கேட்க மறந்து போனன், உங்கட அழகான பெயரைச் சொல்லுங்கோ பாப்பம் ?’
‘மன்னிச்சுக் கொள்ளுங்கோ, என்ட பெயரை வழிப்போக்கருக்கெல்லாம் சொல்லுற வழக்கம் எனக்கில்லை.’
‘நான் வழிப்போக்கன் இல்லையே, இரண்டு தரம் தற்செயலாய் சந்திக்கிறவை சிந்திக்கவும் எல்லோ வைக்கினம் !’
‘கட்டாயப்படுத்தி பெயர் கேட்கிறவையை எனக்குப் பிடிக்காது !’
‘ உங்களுக்கு வேறு என்னென்ன பிடிக்காது பிடிக்கும் எண்டு சொன்னால், நான் ஒரு லிஸ்ட் போட்டு வைச்சுக் கொள்ள வசதியாய் இருக்கும். சொல்லுங்கோ !’ நாக்குப் பிசகாத ஆங்கிலம்.
திமிர் பிடிச்ச கழுதையாய் இருப்பான் போல, மரியாதையை எண்டால் என்ன எண்டு விளங்காத பிரகிருதி. ஆளிண்ட தோற்றத்துக்கும் உடுப்புக்கும் கதைக்கிற கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை போல கிடக்கு.
தமிழனா இல்லையா எண்டே தெரியேல்லை. ஆனால் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர்,மலேசியா எண்டு எந்த நாடாயும் இருக்கலாம். யோசித்துக் கொண்டே அவனைக் கடக்க முயற்சித்தாள்.
அவனை அவள் விலத்தி முன் செல்ல எத்தனித்த அந்த வினாடியில், சொல்லி வைத்தாற்போல் அவன் தொலைபேசி அவனை யாரோஅழைத்ததில் பாடத் தொடங்கியிருந்தது.
‘என்னைத் தாலாட்ட வருவாளோ …நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…தங்கத் தேராட்டம் வருவாளோ…’
தமிழ்ப் பாட்டே தான்!
தொடர்ந்து பாட விட்டுவிட்டு அவளைக் குறு குறுவெனப் பார்த்தவனை பார்க்க முடியாமல் சங்கடத்தில் நெளிந்தவளுக்கு கோபமும் எரிச்சலும் கூடவே எட்டிப்பார்த்தது. இவனை இப்படியே விட்டுவிட்டால் மீண்டும் அடுத்த முறை இன்னொரு பாட்டோடு வந்து நிற்க கூடும்.
இவனுக்கு என்னைப் பற்றிய விபரங்கள் எல்லாம் சொல்ல வேண்டிய தேவை இல்லா விட்டாலும், இவன் என்னோடு உரஞ்சுவதைத் தடுப்பதற்கு சில விடயங்களை வேளைக்கே சொல்லி வைப்பது நல்லதாய்ப்பட்டது அவளுக்கு.
” தமிழிலேயே கதைக்கலாமே ?” அவன் ஒரு வித ஏக்கம் கலந்த குரலில் கூறினான்.
அவளுக்கு ஏதோ ஒரு மொழியில் கதைத்து தொலைத்தாலே போதும் என்ற அவஸ்தையில் சொற்கள் தொண்டைக்குள் சிக்கித் திணறி வெளியில் விழுந்த போது அவளுக்கே அது தன் குரல் தானா என்ற சந்தேகம் எட்டிப் பார்த்தது.
“என்ர குழந்தைகள் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பினம், வழியை விடுங்கோ!”
அவன் முகத்தில் தெரிந்த திகைப்பு அவளுக்குப் பிடித்திருந்தது.
” அடுத்த ஞாயிறு சந்திக்கிறன், பத்திரமாய் வீடு போய் சேருங்கோ!” அவன் சொல்லி முடிக்க முன்னமேயே திடீரெனக் கருத்த மழை மேகம் சட சடவென இடியோடு சேர்த்துக் கொட்டத் தொடங்கியது.
ஓட்டத்தில் சென்ற அவளது கால்கள் ஒரு நூறு யார் தொலைவில் போன போது, இயல்பாகத் தோன்றிய ஒரு வகையான பயத்தில் அவள் தான் வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தாள். அவன் மழையில் தொப்பலாய் நனைந்த படி. ஏதோ அவளுக்குக் காவல் இருப்பது போல, அவள் போன பாதையைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.
அன்று இரவு தூக்கத்தில் அவள் மழையில் நனைந்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள்.
கண்மணியின் ஓட்டம் தொடரும் …