மீதமுள்ள 3 அரை இறுதி சுற்று இடத்துக்கு 6 அணிகள் போட்டி.
சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்திருக்கிறது. மீதமுள்ள 3 பிளே-ஆப் சுற்று இடத்துக்கு 6 அணிகள் போட்டி. இதனால் கடைசிகட்ட ஆட்டங்களின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: 12 ஆட்டங்களில் 8-ல் வெற்றிகளை குவித்துள்ள மும்பை அணி ரன்ரேட்டில் (+1.186) திடமாக இருப்பதால் அந்த அணியின் பிளே-ஆப் இடத்துக்கு ஆபத்து இல்லை. எஞ்சிய 2 ஆட்டங்களில் (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்துக்குள் வந்து விடலாம்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: 14 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் (ஐதராபாத், டெல்லிக்கு எதிராக) உள்ளன. இவற்றில் கட்டாயம் ஒன்றில் வெற்றிக்கனியை பறித்தாக வேண்டும். இரண்டிலும் வாகை சூடினால் எந்த சிக்கலும் இருக்காது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: கம்பீரமாக பயணித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முக்கியமான கட்டத்தில் தவிங்கி நிற்கிறது. கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வி அடைந்ததால் இப்போது பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. 12 ஆட்டங்களில் 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி அணி கடைசி 2 ஆட்டங்களில் (மும்பை, பெங்களூருக்கு எதிராக) வென்றாக வேண்டும். குறைந்தது ஒன்றில் வெற்றி பெற்றால் தான் வாய்ப்பில் நீடிக்க முடியும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 12 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி ரன்ரேட்டில் (-0.479) பின்தங்கியுள்ளது. அதனால் கடைசி 2 ஆட்டங்களிலும் (சென்னை, ராஜஸ்தானுக்கு எதிராக) ‘மெகா’ வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். ஒன்றில் தோற்றால் வாய்ப்பு மங்கி விடும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்: 12 புள்ளிகளுடன் 4-வது இடம் வகிக்கும் பஞ்சாப் அணி ரன்ரேட்டை சரிய விடாமல் கடைசி 2 ஆட்டங்களிலும் (ராஜஸ்தான், சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றால் போதுமானது. இதில் ஒன்றில் கோட்டைவிட்டால் மற்ற அணிகளின் சாதகமான முடிவுக்காக காத்திருக்க வேண்டியது இருக்கும்.
ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி: 12 ஆட்டங்களில் 5-ல் வெற்றி, 7-ல் தோற்றுள்ள ஐதராபாத் அணி கடைசி 2 ஆட்டங்களிலும் (பெங்களூரு, மும்பைக்கு எதிராக) முதலில் வெற்றி பெற வேண்டும். அதே சமயம் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் கடைசி கட்ட ஆட்டங்களில் தோற்க வேண்டும். அப்போது தான் ஐதராபாத் அணிக்கு ‘பிளே-ஆப்’ கதவு திறக்கும். டெல்லி அணி தங்களது எஞ்சிய இரு லீக்கிலும் தோற்றால் அது ஐதராபாத்துக்கு இன்னும் சவுகரியமாக அமையும்.
ராஜஸ்தான் ரோயல்ஸ்: 10 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி கடைசி 2 லீக்கில் (பஞ்சாப், கொல்கத்தாவுக்கு எதிராக) வெற்றி காண வேண்டும். ஆனால் ராஜஸ்தானின் ரன்ரேட் (-0.505) மோசமாக இருப்பதால் கொல்கத்தா, பஞ்சாப், ஐதராபாத் அணிகள் தங்களது இறுதிகட்ட போட்டிகளில் தோல்வி’ அடைந்தால் தான் ராஜஸ்தான் அணி ‘பிளே-ஆப்’ அதிர்ஷ்டத்தை பற்றி நினைத்து பார்க்க முடியும்