பொத்துவிலில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுஉறுதி: பதட்டம்.
இன்று பொத்துவிலில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுஉறுதி: பதட்டம்!
பிரதேசசெயலாளர் அவசரமாக கூட்டிய கூட்டத்தில் பலஇறுக்கமான முடிவுகள்.
பொத்துவில் பிரதேசத்தில் நேற்று(28) புதன்கிழமை மேலும் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேசசெயலாளர் இராசரெத்தினம் திரவியராஜ் தெரிவித்தார்.
இதுவரை பொத்துவிலில் ஜந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு கரடியனாறு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பபட்டிருந்தனர். இந்த இருவருரோடு பொத்துவில் பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 07ஆக அதிகரித்துள்ளது.
அவர்களோடு தொடர்புடைய குடும்பத்தினர் சம்பந்தப்பட்டவர்கள் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டதோடு பிசிஆர் பரிசோனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
இறுதியாக பிசிஆர் பரிசோதனைசெய்யப்பட்ட 21பேரில் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்களும் நேற்று(28) கரடியனாற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் பொத்துவில் நகர் பகுதியைச்சேர்ந்தவர்களாவர்.
அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியில் மூவினங்களும் வாழும் பிரதேசம் பொத்துவில் ஆகும். இலங்கையில் உல்லாசப்பயணிகளை சுண்டிஇழுக்கும் உல்லாசபுரியான அறுகம்பை உல்லைக் கடற்பிரதேசமும் அங்கேதான் உள்ளது.எனவே உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் ஒன்றுகூடுகின்ற கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மையம் அது. எனவே தொற்று என்று வந்துவிட்டால் அது எப்படி எந்த வேகத்தில் பரவும் என்பதை சாதாரணமாக ஊகிக்கமுடியும்.
அவசரக்கூட்டம். நிலைமையை சுமுகமாகக் கையாள பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவசரஅவசரமாக நேற்றே(28) கொவிட்19 தடுப்பு வழிநடாத்தல் குழுவைக்கூட்டினார்.
கூட்டத்தில் சுகாதாரவைத்திய அதிகாரி பிரதேசசபைத்தவிசாளர் பாதுகாப்புத்துறையினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அங்கு மேலும் சில இறுக்கமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
எதிர்வரும் 03தினங்களுக்கு கரைவலை மீன்பிடிக்கு முற்றாக தடைவிதிப்பது.
பொத்துவில் பிரதேசத்துள் வரும் அத்தனை கோட்டல்களிலும் உணவுகளை அங்கு அமர்ந்து உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவை வாங்கிக்கொண்டு போக அனுமதியுண்டு.
பொதுமக்கள் கூட்டம்கூட்டமாக நிற்க அனுமதியில்லை. கடைகளிலும் எந்த இடத்திலும் கூடிநிற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. முப்படையினர் உசாராக வைக்கப்பட்டுள்ளனர்.
தேவையில்லாமல் பொதுமக்கள் விட்டைவிட்டு வெளியேறக்கூடாது.அநாவசியமாக சிறுவாகள் வயோதிபர்கள வீதிகளில் நடமாடுவதைத் தவிர்க்கவேண்டும். ஆட்டோவில் இருவர் மாத்திரமே பயணிக்கவேண்டும்.
பொத்துவில் பிரதேசத்தில் கொரோனாத்தொற்றுக் காரணமாக சுயதனிமைப்படுத்தலுக்குள்ளானவர்கள் தங்கியுள்ள வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் அவர்களின் தகவல்களைப்பெற்று தேவையான உணவு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
களியாட்டம் மற்றும் ஒன்று கூடல் திருமண நிகழ்வுகளைத் தவிர்த்தல் வேண்டும்.
கொரோனாத்தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் பொதுச்சுகாதார பணியாளர்கள் கிராமஉத்தியோகத்தர்கள் பாதுகாப்புத்துறையினருக்கு பொதுமக்கள் தேவையாள ஒத்துழைப்பை வழங்குதல்.
மரணவீடுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படவேண்டும். விளையாட்டு நிகழ்ச்சிகளை விழாக்களைத் தவிர்த்தல் அவசியம்.
வெளியூரிலிருந்துவருவோர் மற்றும் வியாபாத்திற்கு வருவோரினதும் விபரம் பதியப்பட்ட பிற்பாடே அனுமதிக்கப்படவேண்டும்.
கருத்தரங்கு கூட்டம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
பொது வெளிகளில் முகக்கவசம் அணியாமல் விடுவதும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.