யாழ். மாநகர சபை அமர்வில் பங்கேற்றார் மணிவண்ணன் – முன்னணியினர் எதிர்ப்பு
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தெரிவான உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சபை அமர்விற்கு நேற்று பிரசன்னம் தந்தமை தொடர்பில் அவரது அணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரே கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரான மணிவண்ணன் மீது மாநகர சபை எல்லைப் பரப்பரப்புக்குள் வதியும் ஒருவர் தொடர்ந்த வழக்கின் காரணமாக 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் சபை நடவடிக்கைகளில் அவர் பங்குகொள்ள இடைக்காலத் தடை பிறப்பித்திருந்தது.
அந்த வழக்கை கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி வழக்காளர் வாபஸ் வாங்கியதன் காரணமாக அத்தடை உத்தரவும் செயலிழக்க மணிவண்ணன் மீண்டும் சபை நடவடிக்கையில் பங்குகொள்ளும் தகுதியைப் பெற்றிருந்தார்.
இதேநேரம் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு வாபஸ் பெறப்பட்டமை பற்றிய அறிவுறுத்தல் பிரதி தற்போதைய கொரோனா சூழலில் இன்னமும் யாழ். மாநகர சபைக்கு உத்தியோகபூர்வமாக வந்து சேரவில்லை எனக் கூறப்படுகின்றது.
உத்தியோகபூர்வப் பதிவுப் பிரதியைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டு, குறித்த வழக்கு கைவாங்கப்பட்டு விட்டது என சட்டத்தரணி உறுதிப்படுத்திய கடிதம் ஒன்றை முதல்வரிடம் சமர்ப்பித்து நேற்றைய சபை அமர்வில் மணிவண்ணன் பங்குகொண்டார்.
மணிவண்ணனுக்கு எதிரான வழக்கு முடிவுறுத்தப்பட்ட அறிவித்தல் நீதிமன்றில் இருந்து சபைக்கு உத்தியோகபூர்வமாகக் கிடைத்ததா என்ற வினாவை அவரது கட்சியைச் சேர்ந்த வை.கிருபாகரன் ஆட்சேபமாக எழுப்பினார்.
அதற்கு, எந்த அறிவித்தலும் இன்னும் கிடைக்கவில்லை என மாநகர சபையின் செயலாளர் பதிலளித்த சமயம், சட்டத்தரணியால் வழங்கப்பட்ட விளக்கக் கடிதத்தை மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் சபையில் வாசித்து அதை ஏற்பதாக அறிவித்தார்.
தொடர்ந்து சபை அமர்வு இடம்பெற்றபோது யாழ். பஸ்தரிப்பு நிலையக் கடைகளின் பிரச்சினைகள் தொடர்பான விடயத்தைத் தனியாக ஆராய சகல கட்சிகள் சார்பிலும் ஒவ்வொரு பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.
அப்போது முன்னணி சார்பில் மணிவண்ணன் பெயரை பார்த்தீபன் பிரேரித்து அவர் பெயர் பதியப்பட்டபோது, முன்னணியின் மற்றுமோர் உறுப்பினரான ஜெயசீலனின் பெயரை கிருபாகரன் பிரேரித்தார்.
இதன்போது ஒரு கட்சியில் இருந்து எத்தனை பேரை நியமிப்பது என்று கேள்வி எழுப்பப்பட்டு, ஒருவருக்குத்தான் இடம் என்று குறிப்பிட்டு அந்த விடயமும் முடிவுறுத்தப்பட்டது.