கொரோனா’வுக்கு ‘முடிவு’கட்ட யாழில் அதிரடி தீர்மானங்கள்.

கொரோனா’வுக்கு ‘முடிவு’கட்ட
யாழில் அதிரடி தீர்மானங்கள்
மாவட்ட செயலக கூட்டத்தில் முடிவு

* 50 பேருடன் வீட்டிலேயே திருமண நிகழ்வு
* மரணச்சடங்கில் 25 பேர் மாத்திரம் அனுமதி
* தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்கத் தடை
* விளையாட்டுப் போட்டிகளும் மக்கள் சந்திப்புகளும்
பொது நிகழ்வுகளும் ஒத்திவைப்பு
* வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருவோர்
கிராம சேவகர்கள் ஊடாகப் பதிய வேண்டும் 

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராயும் மாவட்ட கொரோனா செயலணி விசேட கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய திருமணங்களை வீட்டில் நடத்த வேண்டும் எனவும், 50 பேருக்கு மேற்படாதவாறு நபர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மரணச்சடங்குகளில் 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், வெளிமாவட்டத்தில்  இருந்து மக்கள் வருகை தருவது தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை திறந்த சந்தைக்கும் அனுமதி இல்லை எனத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்து.

விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைத்தல், மக்கள் கூட்டங்களை மற்றும் பொது நிகழ்வுகளை  ஒத்திவைக்கவும் குறித்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பஸ்களில் இருக்கைகளில் மட்டும் இருந்து பயணிப்பதற்கு  அனுமதி எனவும், உணவங்களில் இருந்து உண்ணுவதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருவோர் கிராம சேவகர்கள் ஊடாகப் பதிவை மேற்கொள் வேண்டும் எனவும், அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்களுக்குத் தகவல் திரட்டு செய்யப்பட வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆலயங்களில் மதகுருமார்களுக்கு மட்டும் அனுமதித்துள்ள அதேவேளை அன்னதானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவசர நிலையைக் கருதி ஒருங்கிணைத்த செயலகமாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் 7 நாட்களும் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு அவசர தொலைபேசி உதவி இலக்கமாக 0212225000 அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன், மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் வைத்தியர் ஏ.கேதீஸ்வரன், வடக்கு மாகாண உளநல சேவை பணிப்பாளர் ஏ.கேசவன், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், யாழ். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், யாழ். மாநகர ஆணையாள், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்கள், சுகாதார சேவை சம்பந்தம்பட்ட அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டம் நிறைவடைந்ததும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.