5. புளாட் வதை முகாமில் நான் – சீலன் (பகுதி 5) “வெல்வோம்-அதற்காக”
தேச விடுதலை, பாட்டாளி வர்க்க புரட்சி – பகுதி 5
எமது பயிற்சியின் ஆரம்பத்ததில் இருந்து பல புதிய விடயங்களைக் கற்றோம். அதேவேளை எனது வீட்டார் தொடர்பான கவலையும் அதிகரித்தது. இப்படி கிட்டத்தட்ட ஒரு 15 நாள் போயிருக்கும், திடீரென ஒரு நாள் முகாமில் பரபரப்பு. பல முக்கிய உறுப்பினர்கள் வழமைக்கு மாறாகவே முகாமிற்கு வந்து போக ஆரம்பித்தனர்.
எம்மிற் பலருக்கு எம்மைச் சுற்றி என்ன நடக்குதென்று தெரியாததனால், அதை அறிந்து கொள்ள எல்லோருமே விரும்பினோம். அப்போதுதான் உமா மகேஸ்வரனுடன் வெளிநாட்டுக்குச் சென்று பி.எல்.ஓ பயிற்சி பெற்ற பி.எல்.ஓ விச்சு என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் புளாட்டின் தண்டனை முகாமில் உள்ளார் என்றும் கூறினார்கள். அவரைப் பார்க்க பலரும் விரும்பினர்.
அதனால் தண்டனை முகாமிற்கு அருகாமையில் காவலுக்குப் போவதற்குப் பலர் விருப்பப்பட்டனர். நான் தண்டனை முகாமிற்கு அருகாமையில் காவல் புரியப் பணிக்கப்பட்டேன். அந்த முகாமிலிருந்து ஐயோ… அம்மா… என்ற அலறல்கள் கேட்கும். எனது தோழர்களிடம் என்ன இது, யாரென்று கேட்டேன்.
அது சிறீலங்கா அரசின் உளவாளி என்றும், அவர் பெயர் மாணிக்கம் என்றும் கூறினர்.
அவருக்கு இரவு வேளைகளில் சித்திரவதைகள் நடப்பது வழக்கம் என்றனர். அந்தச் சித்திரவதை முகாமில் வேறு பலரும் இருந்திருக்கக் கூடும். ஆனால் எமக்குக் கூறப்பட்டது ஒருசிலரின் பெயர்களே. சிறிலங்கா அரசின் உளவாளி என்று கூறப்பட்ட மாணிக்கம் அவர்களுக்கு நடந்த சித்திரவதைகள் பற்றி எனக்கு முற்று முழுதாகத் தெரியாவிட்டாலும், எனக்கு தெரிந்தவற்றை இங்கு பதிவு செய்யலாமென நினைக்கிறேன் .
அவரின் கையை பிளேட்டால் வெட்டி, அந்த வெட்டுக் காயத்திற்குள் வெடிமருந்தை நிரப்பி அதைக் கொழுத்தி விட்டுருந்தனர். அவரின் சிறுநீரையே அவருக்குக் குடிக்கக் கொடுத்திருந்தனர். ஊளன்றியில் தலைகீழாக தொங்க விட்டு (இது அதிகம் எல்லோருக்கும் நடக்கும்) அடிப்பார்கள். இதை விட பல வகை. தற்போது இதை நினைவுக்கு கொண்டு வரவே பயமாக இருக்கின்றது.
சிறிலங்கா இராணுவத்தினர் எமது தோழர்களையும், தமிழ் மக்களையும் கைது செய்து சித்திரவதை செய்கின்றார்கள் என்று, நாட்டில் பக்கம் பக்கமாக எழுதியும், சுவரொட்டிகளில் ஒட்டியும் இருந்தவர்கள், இங்கு அதையே ஈவிரக்கமின்றி செய்தார்கள்.
மாணிக்கம் என்பவர் மட்டுமல்ல, அங்கு பலர் இருந்தனர். எனக்கு மற்றவர்களின் பெயர்கள் மறந்து விட்டது. இதில் ஒரு சிலர் சித்திரவதையால் இறந்திருக்கக் கூடும். ஆனால் விச்சுவிற்கு சித்திரவதை நடந்ததாக நான் அறியவில்லை. அவரின் கூடாரத்திற்கு அருகில் காவல் காக்கச் செல்பவர்கள், விச்சுவுடன் கதைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டனர் . கதைப்பவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அனேகமானோர் அவருடன் கதைப்பதில்லை. முகாம் பொறுப்பாளர்கள் மட்டுமே அவருடன் கதைத்தனர். அதிலும் குறிப்பாக மதன் என்பவரே அவருடன் கதைத்தார்.
திடீரென ஒருநாள் நள்ளிரவு முகாமின் பாதுகாவலர்களால், பாதுகாப்பு மணி ஒலிக்கப்பட்டது. எல்லோரும் எழுந்து முகாமின் பாதுகாப்பு வலையத்திற்குச் சென்று முகாமுக்கான பாதுகாப்பில் ஈடுபட்டோம்.
வழமையாக பாதுகாப்பு மணி ஒலிக்க வைக்கப்படுவது பயிற்சியாக நடத்தப்படுவது வழக்கம், அவ்வாறாயின் சற்று நேரத்தில் எம்மை மைதானத்திற்கு அழைத்து பின்னர் முகாமிற்கு அனுப்புவார்கள்.
அன்று வழமைக்கு மாறாக, நீண்ட நேரமாகியும், எம்மை எழுந்து செல்ல அனுமதிக்கவில்லை. எல்லாத் தோழர் மத்தியிலும் கேள்வி எழ ஆரம்பித்தது. எல்லோருமே மெதுமெதுவாக கதைக்க ஆரம்பித்தனர்.
அவ்வேளை காவற் கடமையில் நின்ற தோழர்களை சிலர் அழைத்து காரணம் கேட்டனர். அதற்கு புலிகள் எங்கள் முகாமைத் தாக்க முற்பட்டனர் என்றும், அதனாலேயே இது நடக்கிறது என்றும் கூறப்பட்டது. ஆனால் இது கட்டுக்கதை என்பதை பின்னர் அறிந்து கொண்டோம்.
இவ்வாறுதான் மாற்று இயக்கங்கள் மீது, வெறுப்பையும் விரோதத்தையும் வளர்க்க ஆரம்பித்தனர். புலிகளுடன் மட்டுமல்ல மற்றைய இயக்கங்களுடனும், இவர்கள் பகை உணர்வையே கொண்டிருந்தனர். இதையே பயிற்சி முகாமில் உள்ளவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தனர். இதனாற் பலர் மற்றைய இயக்கங்களை விரோதிகளாகவும் பார்க்கலானார்கள். இதன் விளைவு தான் பிற்காலத்தில் சங்கிலியுடன் இணைந்து செயற்பட்ட, இடியமீன் போன்றவர்களை உருவாக்கியது.
அதிகாலையாகி வெளிச்சம் வர ஆரம்பித்தது. எம்மை மைதானத்திற்கு அழைத்தனர். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, விரைவாக வருமாறு கட்டளை பிறப்பித்தனர். எல்லோரும் கலைந்து சென்றவாறே, மெதுவாகக் கதைக்க ஆரம்பித்தோம். காரணம் எம்மை கண்காணிப்பதற்கும், மாட்டி விடுவதற்கும் எமக்குள்ளேயே ஒற்றர்கள் இருக்கின்றனர் என்ற சந்தேகமே ஆகும்.
சில விபரங்களை அறிந்தவர் என்ற வகையில் எமக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரிடம், என்ன நடந்தது எனக் கேட்டேன். பி. எல். ஓ விச்சுவை மதன் என்பவர் காப்பாற்றி, அவருடன் தப்பிச் சென்று விட்டாராம் என்று கூறினார். எனக்குப் பயம் தொட்டது. காரணம் முகாம் பொறுப்பாளரே இப்படி என்றால்.., என்ற பயம் தான் அது.
எத்தனை நாட்கள் கடந்து போயின என்பது எனக்குத் தெரியாது. முகாம்களின் அன்றைய பொறுப்பாளர் பரந்தன் ராஜன் திடீரென ஒருநாள் முகாமின் ஆரம்ப தோழர்கள் ஒருசிலரையும், மொட்டை மூர்த்தியின் சகாக்கள் என பலரையும் அழைத்து, ஜீப் வண்டியில் ஏற்றிச் சென்றார்.
அவர்களை எதற்காக, எங்கே கொண்டு சென்றார்கள் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. மறுநாள் காலை நாம் பயிற்சி முடிந்து மைதானத்தில் கூடி நிற்கும் போது, திடீரென மூர்த்தியுடன் வேறு சிலருமாக மதனின் கைகளைப் பிணைத்து விலங்கிட்டு கொட்டனால் அடித்தபடியே இழுத்து வந்தனர். இவன் ஒரு துரோகி, இவனுக்கு அடியுங்கள். எல்லோரையும் பார்த்துக் கைநீட்டிச் சொன்னார். அதை சிலர் ஏற்கவில்லை. வேறு சிலரோ, கைகள் விலங்கிடப்பட்ட மதனை பாய்ந்து பாய்ந்து அடித்தனர்.
ஐயோ அம்மா என்ற கதறலோடு, இரத்தம் உடலால் சீறிப்பாய்ந்தது. ஒரு மனிதனை ஈவிரக்கமின்றி, அடிமேல் அடித்த அந்தச் சம்பவம் என் மனதை பெரிதாகவே பாதித்துவிட்டது. அதனால் எனக்குள் ஒருவித பயமும் ஏற்பட ஆரம்பித்தது. இதில் முக்கியமான விடையம் ஒன்றை குறிப்பிட விரும்புகின்றேன்.
சித்திரவதை முகாமிலிருந்து தப்பித்த மதனும் விச்சுவும் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பண்ணையார் வீட்டில் மறைந்திருந்தனர். அவர்களைக் கைது செய்ய முற்பட்டபோது பண்ணையாரும், அவரின் ஆட்களும் தடுக்க முயன்றனர்.
அப்போது, பண்ணையாரை பரந்தன் ராஜன் சுட்டுக் கொன்றான். இக்கொலை பற்றிய தகவல்கள் அன்றைய தமிழ் நாட்டு வானொலிச் செய்தியிலும் ஒலிபரப்பப்பட்டது . நாம் பயிற்சி பெற்று வந்த இடத்தில், எமக்கு அடைக்கலம் தந்த மக்கள் மீதும், தமது அராஜகத்தையும் தமது பிற்போக்குத் தனத்தையும் பிரயோகித்தது பிளாட் தலைமை. தங்கள் கொலைகார வக்கிரத்தை காட்டும் முகமாகவே, துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.
இவ்வாறான ஒரு இயக்கமா இது, என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்தது. தமக்கும் இதே நிலமை ஏற்படலாம் என்று பயத்தால், அங்கிருந்தவர்கள் மௌனமாக இருந்தார்கள். இக்காலத்தில் தான், பலர் பயிற்சி முகாமைவிட்டு தப்பிச்செல்ல முயற்சித்தனர்.
தமது தாயகத்தை மீட்க, தம்மால் அதிகூடிய கொடையாக தங்கள் உயிரையே கொடுக்க கூடிய தோழர்களின் மனதில், வெறுப்பும் பயமுமே எஞ்சியிருந்தது. அந்த முகாமிற் தங்கிப் பயிற்சி எடுப்பதற்கு எனக்கு கொஞ்சங்கூட விருப்பம் இல்லாமல் போனது. ஒருவாறு நான் எனக்கு சுகயீனம் என்று கூறியதனால், என்னை வைத்தியத்திற்காக ஓரத்தநாட்டிற்கு (இலங்கையிலிருந்து இந்தியா வந்த அன்று நாம் முதற் தடவையாக பயிற்சி முகாமுக்கு வருமுன் சந்தித்த அலுவலகம்) அனுப்பிவைத்தனர்.
அங்கிருந்து மறுநாள் காலை தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கே என்னைப் பரிசோதித்த வைத்தியர், மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் எனக் கூறினார். அதனால் நான் அங்கிருக்கும் முகாமில் சில நாட்கள் தங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது நாம் உறங்குவது மொட்டைமாடியில் தான்.
அங்கு ஒருவர் மிகவும் நகைச்சுவையாக கதைத்தார் அவர் பெயர் நாகேஸ். யாழ்பாணத்தைச் சேர்ந்தவர். இவர் வட இந்தியாவில் இருந்து வந்திருந்தார். தான் அமைப்பின் வெளி உளவுப் பிரிவில் வேலை செய்வதாக முதலில் கூறினார். பின்னர் ஒரு இரவு படுக்கும் போது நகைச்சுவையாக, தனது மலவாயில் பெரியையாவிற்காக பெருத்துவிட்டது (எனது குண்டி ஓட்டை பெரிசாகி விட்டது, பெரிசுக்காக) எனக் கூறினார். முதலில் எனக்கு இது விளங்கவில்லை. எனது அருகாமையில் இருந்த தோழரிடம் கேட்டேன் அவரும் தனக்கு புரிவில்லை என்றார். எனக்கோ இது என்ன என்ற அறிய ஆவலாக இருந்தது. அங்கு நீண்ட நாட்களாக வேலை செய்த எனது நண்பரிடம் கேட்டேன். அவர் ஒரு சில அமைப்பின் விடயங்களை அறிந்தவர் என்பதால், மிகவும் இரகசியமாக இவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபடுபவர் என்று கூறினார். இதை மற்றவர்கள் அறிந்தால், உனக்கும் எனக்கும் மரணதண்டனை தான் என்றும் கூறினார். இதை கேட்டதும் எனக்கு பயம் பிடிக்க ஆரம்பித்தது.
தேச விடுதலை என்றும், மார்க்சியம் என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும், பேசிய இவர்களிடம் இருந்த நடைமுறை என்பது, ஒரு மாபியா இயக்க நடைமுறையே. தளத்திலோ தமது வயிற்றுப் பசிக்காக தம்மால் எதை செய்ய முடியுமோ அதைச் செய்ய புறப்பட்ட பாமர மக்களில் ஒரு சிலர் கள்ளச்சாரயம் (கசிப்பு) விற்றனர். அவர்களை தேடி திரிந்து முதலில் எச்சரித்தனர் கழகத்தினர். அதன் பின்னரும் தமக்கு பிழைப்பில்லாததால், மீண்டும் கசிப்பு விற்கத் தொடங்கவே அவர்களுக்கு மரண தண்டனை வழங்கினர்.
ஆனால் இவர்களோ பெரியளவில், சர்வதேச கிரிமினலாக மாறி போதைவஸ்து கடத்துகின்றார்கள். எந்தளவுக்கு இவர்களின் அரசியல் அன்று இருந்தது, என்பதை இது வெளிப்படுத்துகின்றது. ஊருக்கு உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லை என்பதைப் போலவே, இவர்களின் நடவடிக்கைகள் அமைந்தது.
நான் ஓரத்த நாட்டில் தங்கியிருக்கும் போது தான் தளத்தில் இருந்து மீரான் மாஸ்ரரும் அங்கு வந்திருந்தார். அவரிடம் தள விபரங்களை அறியக்கூடியதாக இருந்தது. அக்காலத்தில் தான் முதல் முறையாக தோழர் தங்கராசாவை சந்தித்தேன். அவர் அனைத்து முகாங்களுக்கும் சென்று தான் அரசியல் வகுப்பு எடுக்க விருப்பதாகக் கூறினார். அவருடன் ஏற்பட்ட உரையாடலே, எனக்கு அரசியல் மீது அதிக ஆர்வம் எற்படக் காரணமாகியது. மேலும் அவர் பல புத்தகங்களைச் சொல்லி அவற்றை முக்கியமாக வாசிக்கும் படி எமக்குக் கூறினார். ஒருசில நாட்கள் கழிய, நான் மீண்டும் பழைய முகாமிற்கு திரும்பினேன். அங்கு சென்றதும் மீண்டும் பயம், பதட்டமென ஏற்பட்ட போதும் ஒருவாறு பயிற்சியை தொடர்ந்தேன்.
ஒரு நாள் மதன் கொல்லப்பட்டார் என அறிந்ததோம். அவரைக் கொலை செய்வதற்கான உத்தரவை, அமைப்பின் மத்திய குழுவே வழங்கியதென, பின்நாளில் அதன் முக்கியஸ்த்தர்களில் ஒருவரான மீரான் மாஸ்டர் கூறினார். திடீரென என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நின்றேன். எனக்குத் தெரிந்தவரை இதுதான் முதல் உட்படுகொலை என நான் நினைக்கிறேன்.
தொடரும் …..
– சீலன்