யாழ். வந்த 6 பேர் தொலைபேசியை நிறுத்திவைத்து விட்டு தலைமறைவு
கொரோனா நோயாளிகளுடன்
யாழ். வந்த 6 பேர் தொலைபேசியை
நிறுத்திவைத்து விட்டு தலைமறைவு
– பொலிஸார் தேடுதல் வேட்டை
“யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பஸ்ஸில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.”
– இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என அறியப்பட்ட வெள்ளவத்தை உணவக உரிமையாளர் மற்றும் அவருடன் பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவரும் என நால்வர் WP NC 8760 என்ற இலக்கமுடைய தனியார் பஸ்ஸில் கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.
அவர்கள் நால்வரும் மறுநாள் 26ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அங்கிருந்து உணவக உரிமையாளர் ஓட்டோவில் நல்லூர் – பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். பணியாளர்களும் ஓட்டோவில் வேலணை, புங்குடுதீவுக்குப் புறப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்குக் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்ட WP NC 8760 என்ற இலக்கமுடைய தனியார் பஸ்ஸில் யணித்தவர்கள் சமூக அக்கறையுடன் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் பஸ் சேவை நிறுவனத்திடமிருந்து பயணித்தவர்களின் தொலைபேசி இலக்கம் பெறப்பட்டு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர். அவ்வாறு 37 பயணிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன், சாரதியும் நடத்துநரும் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். எனினும், அந்தப் பஸ்ஸில் பயணித்த 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” – என்றார்.