தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக மாவை நியமனம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
செயலாளராக மாவை நியமனம்
– தேர்தல் ஆணையகத்துக்கு அறிவிக்க முடிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக மாவை சோ. சேனாதிராஜா செயற்படுவார் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணக்கம் கண்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலமையகத்தில் கூடி ஆராய்ந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இந்த முடிவை உடனடியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் கட்சி ஒன்றைப் பதிவதற்கான பூர்வாங்க விண்ணப்பம் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு நீண்ட பல வருட காலமாக அது நிலுவையில் உள்ளது. எனினும், பதிவைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அப்படிக் கூட்டமைப்பை ஒரு தனிக் கட்சியாகப் பதிவு செய்வதற்குத் தமிழரசுக் கட்சியினருக்கு விருப்பமில்லை என்பது தெரிந்ததே. ஆனாலும், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் வேறு யாரும் ஒரு கட்சியைப் பதிவு செய்ய முயற்சிப்பதற்கு இடமளிக்காமல், அந்தப் பெயருக்குத் தடுப்புப் போடுவதற்காகவே இப்படி அந்தப் பெயரில் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், பதிவு முயற்சி பூர்த்தி செய்யப்படாமல் அது இழுபட விடுபட்டிருக்கின்றது.
அப்படியான விண்ணப்பம் தொடர்பில் ஒரு பொதுச்செயலாளரைப் பிரேரித்து, அதனைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதன் மூலமே எதிர்காலத்தில் கூட்டமைப்பின் பெயரில் வேறு யாரும் கட்சி ஒன்றைப் பதிவு செய்ய இடமளிக்காமல் தடுக்க முடியும் என வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டினார் எனத் தெரிகின்றது.
இதன்போது அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் கோரினார். அந்த வர்த்தமானி அறிவித்தலை சிவஞானம் உடன் சமர்ப்பித்தார். இதையடுத்து அந்தப் பதவிக்கு மாவை சேனாதிராஜாவை நியமிக்கலாம் எனச் சித்தார்த்தன் தெரிவித்தார். அதை ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும் ஏற்றுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சோ.சேனாதிராஜா, சி.வி.கே. சிவஞானம், ப.சத்தியலிங்கம், எஸ்.எக்ஸ்.குலநாயகம், பெ.கனகசபாபதி ஆகியோரும், புளொட் அமைப்பின் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், க.சிவநேசன் (பவான்) உட்பட ஐவரும் , ரெலோவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோதராதலிங்கம் உட்பட மூவரும் கலந்துகொண்டனர்.