ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு அணியுடனான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் துடுப்பாட்டததை துவக்கிய பெங்களூரு அணியை ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா மிரட்டினார். துவக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் (5 ரன்கள்) கப்டன் விராட் கோலி (7 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழக்கச்செய்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
டி வில்லியர்ஸ் (24 ரன்கள்) ஏமாற்றினார். பெங்களூரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணமே இருந்தது. இதனால், அந்த அணியின் ஓட்ட வேகம் குறைந்தது. நிர்ணையிக்கப்பட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 120 ஓட்டங்களை சேர்த்தது.
இதையடுத்து 121 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டேவிட் வோர்னர் 8 ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். விருத்திமான் சஹா 39 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டேவின் ஆட்டம் சற்று ஆறுதல் அளித்தாலும், 26 ரன்களில் கேட்ச் கொடுத்து அவரும் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த கனே வில்லியம்சன்(8 ரன்கள்), அபிஷேக் சர்மா(8 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இறுதியாக ஐதராபாத் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் ஹோல்டர்(26 ரன்கள்) மற்றும் அப்துல் சமத் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.