அழிவை நோக்கிச் செல்கிறதா ஐரோப்பா? : சுவிசிலிருந்து சண் தவராஜா
இரண்டாவது அலை என வர்ணிக்கப்படும் கொரோனாத் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் சுழன்றடிக்கும் நிலையில் ஐரோப்பாக் கண்டம் மீண்டும் ஒரு ஊரடங்கை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கண்டம் முழுவதும் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியோரின் எண்ணிக்கை 90 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில், இதுவரை இரண்டரை இலட்சம் பேர் வரையில் மரணத்தைத் தழுவி உள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி தருவதாக உள்ளது. மருத்துவத்தில் முன்னேறிய கண்டமாக இருந்த போதிலும் கண்ணுக்குத் தெரியாத கிருமியின் தாக்கத்தால் மக்கள் ஆடிப்போய் உள்ளதைப் பார்க்க முடிகின்றது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தடுப்பு மருந்து எதுவும் இல்லை என்னும் துணைத் தகவலும் மக்களைக் கிலிக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கின்றது.
மருத்துவத் துறையின் நெருக்கடி
நாளாந்தம் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் பெருக்கம் மருத்துவத் துறையினரைப் பாரிய நெருக்கடிக்குள் இட்டுச் சென்றுள்ளது. நோயின் கொடுமை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்வடைவதால் ஏற்படும் ஆளணி நெருக்கடி ஒருபுறம், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் படுவோருக்கான பௌதிக வளங்களின் மட்டுப்பாடு மறுபுறம் என மருத்துவத் துறை சிக்கித் திணறுகின்றது.
இரண்டாம் உலக யுத்த காலகட்டத்தின் பின்னர் ஐரோப்பாக் கண்டம் சந்தித்துள்ள மிகப் பாரிய நெருக்கடி என வர்ணிக்கப்படும் இந்த நெருக்கடியைக் கையாழுவதில் அரசாங்கங்கள் திணறி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. மார்ச் மாதத்தில் கொரோனாத் தொற்று ஆரம்பமாகிய பொழுதில் ஊரடங்கு மற்றும் உள்ளிருப்பு நடவடிக்கைகளைத் துணிவுடன் மேற்கொண்ட அரசாங்கங்கள், தற்போது இரண்டவது அலையைச் சமாளிக்கும் விதத்தில் தயக்கத்துடனேயே நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் காணமுடிகின்றது.
முதலாவது அலைத் தாக்குதலை ஓரளவு சமாளித்து, யூன் மாதத்தில் இறுக்கமான நடவடிக்கைகளைத் தளர்த்திய போதில், அரசாங்கங்கள் அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பதாகப் பல தரப்புக்களில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக மருத்துவத் துறையினர் எச்சரிக்கை செய்தனர். இருந்தும், பொருளாதார நலன்களை முன்னிறுத்திய ஐரோப்பிய அரசாங்கங்கள் விமர்சனங்களைப் புறந்தள்ளி தளர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டன. தளர்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொதுமக்கள் தளர்த்திக் கொண்டதால், கொரோனா முழுவீச்சுடன் இரண்டாவது அலைத் தாக்குதலைத் தொடுத்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஐரோப்பாவில் தினசரி 2 இலட்சம் புதிய தொற்றாளர்கள் அடையாளங் காணப்படுகின்றார்கள். இரண்டாயிரம் பேர் வரை மரணத்தைத் தழுவுகின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இரட்டிப்பாகிக் கொண்டே செல்கின்றது. இந்த நிலை தொடருமானால் வெகு விரைவில் நோயாளிகளைப் பராமரிப்பதற்கான வசதிகள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை வெளியிடப் பட்டுள்ளது. ஏற்கனவே, நெதர்லாந்து தனது நோயாளர்களை ஜேர்மனிக்கு அனுப்பி பராமரித்து வருகின்றது. நோயாளர் பராமரிப்பில் சிக்கல் உருவாகுமானால் ஜேர்மனி அல்லது இத்தாலி நாட்டுக்கு தனது நாட்டு நோயாளிகளை அனுப்பிவைத்து பராமரிப்பது தொடர்பிலான பேச்சுக்களை சுவிஸ் நாடு நடாத்தி வருகின்றது.
85 வயதுக்கு மேற்பட்டோரை மரணிக்க விடுதல்
இது தவிர மற்றோரு முக்கிய விடயமும் சுவிஸ் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்படக் கூடிய இடநெருக்கடி நிலையில் எத்தகைய முடிவை மருத்துவர்கள் மெற்கொள்வது என்பது தொடர்பில் ஆராயப்பட்ட போதில், மருத்துவ விஞ்ஞான அக்கடமியும், தீவிர சிகிச்சை மருத்துவ சங்கமும் இணைந்து இளம் நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவதென முடிவு செய்யப் பட்டுள்ளது. சீனாவில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் முதியோருக்கு கொரோனாத் தொற்றில் இருந்து உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் அரிது என்பதால் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்டும் நிலை ஏற்படுமாயின், தட்டுப்பாடு நிலவினால், வேறொரு இளம் நோயாளிக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிகிறது. 85 வயதுக்கு மேற்பட்டவர்களை மரணிக்க விடும் ஒரு செயற்பாடு இதுவென ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், தற்போதைய தொற்று அதிகரிப்பு வீதம் நீடிக்குமானால் சுவிஸ் நாடு இந்த நிலைப்பாட்டிற்கு வருவதற்கு அதிக நாட்கள் எடுக்காது என்பது நோக்கர்கள் கருத்து.
ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் உள்ள மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கட்டில்களில் 50 வீதமானவை கொரோனா நோயாளிகளைப் பராமரிக்கப் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்பெயின் நாட்டில் கால்வாசிக்கும் அதிகமான கட்டில்களில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
பிரித்தானியா, இத்தாலி, போலந்து ஆகிய நாடுகளில் தினமும் சுமார் 20,000 பேர் வரையான புதிய தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டு வருகின்றார்கள். ஜேர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் தினமும் 14,000 பேர்வரை இந்தப் பட்டியலில் இணைகின்றார்கள்.
இங்கிலாந்தில் தினமும் ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மார்ச் மாதத்தோடு ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைவே. அப்போது ஒரே நாளில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துமனைகளில் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், தற்போதைய எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை இரட்டிப்பாகிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே, வெகு விரைவில் இங்கிலாந்திலும் மருத்துவத் துறை பாரிய சவாலைச் சந்திக்க இருக்கிறது.
மனித உயிர்களா, பொருளாதாரமா? இரண்டில் எது அதிக பெறுமதியானது என்ற கேள்வி எழுப்பப்படும் போதில், உயிர்களை விடவும் பொருளாதாரமே பெறுமதியானது என்ற தத்துவத்தையே ஐரோப்பிய ஆட்சியாளர்கள் முன்னிறுத்துகின்றார்கள்.
அதிர்ச்சிதரும் மரண எதிர்வுகூறல்கள்
கொரோனத் தொற்று ஆரம்பமாகிய காலகட்டத்தில் ஜேர்மன் நாட்டு உளவுத்துறை அந்த நாட்டு அரசாங்கத்திடம் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையின் பிரகாரம் ஜேர்மன் குடிமக்கள் அனைவர் மத்தியிலும் கொரோனா பரவும்போது பத்து இலட்சம் பேர் மரணத்தைத் தழுவ நேரிடும். சிலவேளை, அன்றைய நிலையில் ஜேர்மன் அரசாங்கம் மேற்கொண்ட இறுக்கமான நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கையே காரணமாக இருந்திருக்கக் கூடும்.
அண்மையில் பிரான்ஸ் அதிபர் தனது உரையில் தீவிர நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாதவிடத்து நான்கு இலட்சம் மக்கள் பிரான்சில் இறக்க நேரிடலாம் எனக் கூறியிருந்தமை நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக இருக்கிறது.
இந்நிலையில், பிரான்ஸ் நாடு ஒக்ரோபர் 28 ஆம் திகதி முதல் இறுக்கமான பல நடவடிக்கைகளை அறிவித்திருக்கின்றது. ஜேர்மனி நவம்பர் 2 ஆம் திகதி முதல் புதிய நடவடிக்கைகளைத் தொடங்குகின்றது.
உணவகங்கள், தங்குவிடுதிகள் யாவும் மூடப்படுவதாக அறிவித்த பிரான்ஸ் அரசாங்கம், அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் நடமாடுவதையும் தடை செய்துள்ளது. புதிய விதிகளின் பிரகாரம் தாம் வசிக்கும் வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரையுமே ஒருவர் பொருள் கொள்வனவுக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் வெளியே செல்ல முடியும்.
பிரான்சில் அறிவிக்கப்பட்ட உள்ளிருப்பு 29 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. இதற்கு முன்னதாகவே பாரிஸ் நகர வாசிகள் பெரும்பாலும் கிராமப் புறங்களை நாடிச் செல்லத் தொடங்கிவிட்டனர். இதனால் ஏற்பட்ட வாகன நெரிசல் 700 கிலோமீற்றர் தொலைவு வரை நீடித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மறுபுறம், இறுதிநாள் களியாட்டங்களில் ஈடுபட்ட மக்களால் உணவகங்களும், கேளிக்கை விடுதிகளும் நிரம்பி வழிந்தன. இத்தகைய செயற்பாடுகள் மக்களின் பொதுவான மனநிலையை உணர்த்துவனவாக உள்ளன.
ஜேர்மனியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பிரான்ஸ் நாட்டைப் போன்று அதிக இறுக்கம் கொண்டவையாக இல்லை. இங்கே சிறிய கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
நாட்டு எல்லைக்கு வெளியே சிந்திக்காத சுவிஸ்
இதேவேளை சுவிற்சர்லாந்தும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ஒக்டோபர் 21 இல் ஊடக சந்திப்பை நடாத்திய மத்திய அமைச்சர்கள் ஒருசில நடவடிக்கைகளை அறிவித்துவிட்டு, நிலைமைகளை அனுசரித்து புதிய நடவடிக்கைகள் 28 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. அயர்லாந்து போன்று குறுகியகால உள்ளிருப்பு அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், பல்கலைக் கழகங்களில் தொலைக் கல்வி, உணவகங்களை இரவு 11 மணிமுதல் காலை 6 மணிவரை பூட்டுதல், 10 பேருக்கு மேல் நிகழ்வுகளை நடத்துவதைத் தடைசெய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளே அறிவிக்கப்பட்டன. அயல்நாடான ஜேர்மனி, பிரான்ஸ் போன்றவை இறுக்கமான நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில் சுவிஸ் மேம்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமை தொடர்பில் செய்திகளை வெளியிட்ட அயல்நாட்டு ஊடகங்கள் “வழமை போன்று சுவிஸ், தனது நாட்டு எல்லைகளைக் கடந்து சிந்திக்கவில்லை” எனக் கிண்டல் செய்திருந்தன.
ஐரோப்பா அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் மனித உயிர்களை விடவும், பொருளாதாரத்திற்கு முன்னுரிமை தருவனவாக உள்ளன என்பது ஒருபுறம் இருக்க மறைமுகமான ஒரு செயற்திட்டமும் உள்ளதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றன. கைக்;கெட்டிய தூரத்தில் தடுப்பு மருந்து இல்லாத நிலையில் மந்தை நிர்ப்பீடனம் (Herd Immunity) என்பதை இலக்கு வைத்து அவை காய் நகர்த்துகின்றனவோ எனச் சந்தேகிக்க இடமுள்ளது. முதல் அலைத் தாக்குதலில் மக்களை வீடுகளுள் முடக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்று இறுக்கமான நடவடிக்கைகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன. தொற்றுவீதம், மரணவீதம் என்பவை அதிகமாக உள்ள போதிலும் அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் கேள்விகளை எழுப்புவனவாகவே உள்ளன.
ஐரோப்பாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் ஒன்றான பெல்ஜியம் தனது மருத்துவத் துறையில் பணியாற்றுவோர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருந்தாலும் தேவைப்படுமிடத்து பணிக்கு வரவேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மருத்துவத் துறையில் பணியாற்றுவோர் தமது பணிச்சுமை தொடர்பில் கண்டனங்களை முன்வைத்தும், சம்பள உயர்வு கோரியும் பல நாடுகளிலும் போராட்டங்களை நடாத்தியமை தெரிந்ததே. இந்த வேளையில் முதலாம் உலக யுத்த காலகட்டத்தில் மணரத்தைத் தழுவிய செவிலியர்களின் எண்ணிக்கையைப் போன்று கொரோனாக் கொள்ளைநோய்க் காலத்திலும் உலகளாவிய அடிப்படையில் மரணத்தைத் தழுவிக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மருத்துவத் துறையினரின் மரணங்கள்
செவிலியர்களுக்கான சர்வதேசச் சபை விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்படி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் உலகப் போர் நடைபெற்ற 1914 முதல் 18 வரையான நான்கு ஆண்டுகாலப் பகுதியில் உலகம் முழுவதிலும் 1,500 செவிலியர்கள் மரணத்தைத் தழுவியிருந்தனர். கொரோனாக் கொள்ளைநோய் ஆரம்பித்த 11 மாதங்களில் இவ்வளவு எண்ணிக்கையான செவிலியர்கள் மரணத்தைத் தழுவியுள்ளனர். இந்த எண்ணிக்கை இதை விடவும் அதிகமாகவே இருக்கக் கூடும். ஏனெனில், தற்போதைய நிலையில் 44 நாடுகள் மாத்திரமே தங்கள் நாடுகளில் மரணத்தைத் தழுவியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளன. குறித்த விபரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு பல்வேறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் பல அரசாங்கங்கள் அவற்றைச் செவிமடுப்பதில்லை என்கிறார் செவிலியர்களுக்கான சர்வதேசச் சபையின் தலைவர் ஹோவார்ட் கற்றோன்.
அவரது மதிப்பீட்டின் படி தற்போது உலகில் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியுள்ளோரில் 10 வீதமானவர்கள் மருத்துவத் துறைப் பணியாளர்களே. சுமார் 20,000 வரையான மருத்துவத் துறைப் பணியாளர்கள் இதுவரை மரணத்தைத் தழுவியிருக்கலாம் என்கிறார் அவர். தமது உயிர்களைப் பணயம் வைத்து ஏனையோரின் உயிர்களைக் காக்கப் போராடும் மருத்துவத் துறைப் பணியாளர்களுக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையையும் நாம் வழங்குகின்றோமா என இந்த வேளையில் ஒருகணம் சிந்தித்துப் பார்ப்பது சிறந்தது.