பிரிட்டனில் ஒருமாத காலத்திற்கு இரண்டாம் பொது முடக்கம்: பிற ஐரோப்பிய நாடுகளில் என்ன நிலை?
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் இரண்டாம் பொது முடக்கத்தை அறிவித்துள்ளார்.
ஒருமாத காலத்திற்கு இந்த பொது முடக்கம் செயல்பாட்டில் இருக்கும்.
உணவு விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளைத் தவிர பிற கடைகள், நான்கு வாரங்களுக்கு மூடப்படுவதாக பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் முந்தைய பொதுமுடக்கத்தை போல் அல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்கள் திறந்திருக்கும் என அவர் தெரிவித்தார். டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த வருடம் கிறிஸ்துமஸ் மிக வித்தியாசமான ஒன்றாக இருக்கும். ஆனால் தற்போது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது மூலம், பல நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பம் எதிர்வரும் காலத்தில் உருவாகும்,” என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
பொது முடக்கம் வர்த்தகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவது குறித்து தாம் வருந்துவதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், உதவி தேவைப்படும் நபர்களுக்கு உதவி செய்பவர்கள் வெளியே செல்லலாம் என்றும் புதிய கட்டுப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாட்டு விதிகளில், வீடுகளில் ஒன்றுகூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிற நாடுகளில் என்ன நிலை?
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை சமாளிக்க இயலாமல் திணறிவருகின்றன. சில நாடுகளில் முழு பொது முடக்கமும், சில நாடுகளில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தேசிய அளவிலான முடக்க நிலையை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அத்தியாவசியப் பணிகள் மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே ஆட்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங், கொரோனா வைரஸின் முதல் அலையை விட மோசமான இரண்டாவது அலை நாட்டைத் தாக்கும் இடர்பாடு இருப்பதாகத் தெரிவித்திருந்தார்
பிரான்ஸில் ஏப்ரலுக்குப் பிந்தைய காலத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிக அளவில் தொற்றுகளும், மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
கோவிட் 19 முதல் அலையின் தொடக்க நிலையில் கோவிட் பாதிப்பின் மையமாக விளங்கிய ஐரோப்பிய நாடான இத்தாலி கடந்த திங்கள்கிழமை மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.
ஆஸ்ட்ரியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்ட்ரியாவில் இரவு எட்டு மணியிலிருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகலில் பள்ளிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஸ்லோவாகியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலாந்தில் தொடர்ந்து 50ஆவது நாளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முதல் அலையில் அவ்வளவாகப் பாதிக்கப்படாத செக் குடியரசு, போலாந்து ஆகியவையும் இந்த முறை தப்பிக்கவில்லை. இரண்டாவது அலையில் மிக மோசமான அளவில் தொற்றுகள் இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹங்கேரியிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே சமயத்தில் 4000க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் ஹங்கேரியில் பொது நிகழ்ச்சிகள், பள்ளிகள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன மேலும், இந்த பெருந்தொற்று காலம் முழுவதுமே அங்கு கால்பந்து போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
க்ரீஸில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிற ஐரோப்பிய நாடுகள் போல் இல்லாமல் க்ரீஸில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது இருப்பினும் அக்டோபர் மாதம் தொடங்கி அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெல்ஜியத்தில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவல்படி ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியத்தில்தான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் அதிகமாகவுள்ளது.
- பீபீசீ