தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி பிளே-ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு துபாயில் 54-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. கொல்கத்தா அணியில் இரு மாற்றமாக லோக்கி பெர்குசன், ரிங்கு சிங் நீக்கப்பட்டு ஆ.ரஸ்செல், ஷி.மாவி சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார்.இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி 2-வது பந்திலேயே விக்கெட்டை இழந்தது. நிதிஷ் ராணா (0) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் சுப்மான் கில்லும், ராகுல் திரிபாதியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 73 ரன்களை எட்டிய போது சுப்மான் கில் 36 ரன்களில் (24 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார். 3-வது விக்கெட்டுக்கு வந்த சுனில் நரின் (0), திரிபாதி (39 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் (0) அடுத்தடுத்து வெளியேற கொல்கத்தா தடுமாற்றத்திற்கு உள்ளானது.
அடுத்து 192 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி சிக்சருடன் ரன் கணக்கை அட்டகாசமாக தொடங்கியது. ஆனால் அதிரடி காட்ட வேண்டிய அழுத்தத்தில் மளமளவென விக்கெட்டுகளை தாரை வார்த்தது. உத்தப்பா (6 ரன்), பென் ஸ்டோக்ஸ் (18 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (4 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வரிசையாக கபளீகரம் செய்தார். இதில் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பாய்ந்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து சிலிர்க்க வைத்தார். சஞ்சு சாம்சனும் (1 ரன்) நிலைக்கவில்லை. இதனால் ராஜஸ்தான் அணியால் நிமிர முடியாமல் போய் விட்டது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 35 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து சரண் அடைந்தது. கொல்கத்தா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் பிளே-ஆப் வாய்ப்பிலும் நீடிக்கிறது. 8-வது தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி வாய்ப்பை இழந்து வெளியேறியது.