22ஆவது கொரோனா மரணம்: சுகாதார அதிகாரிகள் விளக்கம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருக்கு அடிமையான இளைஞர் ஒருவர், நோய் அறிகுறிகளுடன் கடந்த 31ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தபோது வைத்தியசாலைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
இவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது பிரேத பரிசோதனையின்போது உறுதி செய்யப்பட்ட நிலையில், இவரின் உயிரிழப்பை நாட்டில் கொரோனாவால் ஏற்பட்ட 22 ஆவது உயிரிழப்பாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞர் தற்கொலை காரணமாகவே உயிரிழந்துள்ள நிலையில், அதனை எப்படி கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையுடன் சேர்க்க முடியும் என்று பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக தெளிவுப்படுத்தியுள்ள சுகாதார அதிகாரிகள் இலங்கையில் கொரோனா தொடர்பான மரணங்கள் இரண்டு வகைகளின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேரடியான கொரோனா தொடர்பான மரணங்கள் மற்றும் மறைமுகமான கொரோனா தொடர்பான மரணங்கள் என இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர், சிகிச்சையளிக்கப்படும்போது உயிரிழந்தால் அது நேரடியான கொரோனா மரணத்துடன் தொடர்புடையது. மறைமுகமான கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் எனும்போது, விபத்து அல்லது தற்கொலை போன்ற பிற காரணங்களால் இறந்த ஒருவர், பிரேத பரிசோதனையின்போது நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளைத் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்படுவதைக் குறிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.