கொரோனா வைத்தியசாலையாக கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி!
இன்று முதல் கொரோனா வைத்தியசாலையாக இயங்கும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி!
யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி இன்று திங்கட்கிழமை முதல் கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்க உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் மருதங்கேனி வைத்தியசாலை கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக முதலில் மாற்றப்பட்டு தற்போது சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கு மேலதிகமாக கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்கி வந்த கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த்து.
இந் நிலையில் பூர்வாங்க நடவடிக்கைகள் முடிவடைந்து இன்று முதல் இந்தக் கல்லூரி கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்படும் வகையில் சேவைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மாகாண நிர்வாகத்திற்குட்பட்ட மருதங்கேணி வைத்தியசாலை கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்பட்ட பின்னர், இரண்டாவது புதிய வைத்தியசாலை எதற்கு? ஏற்கனவே அமைக்கப்பட்ட வைத்தியசாலையில் வசதிகளை அதிகரிக்கலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மாகாணத்திற்குட்பட்ட மருதங்கேணி வைத்தியசாலையில் யாழ் போதனா வைத்தியசாலை ஆளணி பயன்படுத்தப்படவில்லை, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தனது ஆளுகைக்குட்பட்ட முதன்மையான கொரோனா வைத்தியசாலையை இயக்க விரும்புவதால் அந்த தடைகளை ஏற்படுத்தினாரா? கோப்பாய் தேசிய கல்வியற்கல்லூரியை கொரோனா வைத்தியசாலையாக மாற்றினால், அது மீண்டும் கல்வியல்கல்லூரியாக இயங்குமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.