மூன்றாம் அலைக்கு 8,266 பேர் இலக்கு; மொத்தப் பாதிப்பு 11,744 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலையில் 8 ஆயிரத்து 266 பேர் சிக்கியுள்ளனர். இன்று மாத்திரம் 409 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை சுகாதார அமைச்சு இன்றிரவு தெரிவித்துள்ளது.
கொரோனாவின் மூன்றாம் அலை மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியாகொட மீன் சந்தை ஊடாக உருவானது.
கடந்த ஒரு மாதம் இந்தக் கொரோனா கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 266 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 6 ஆயிரத்து 140 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்து 581 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.