கொல்கத்தா நைட் ரைடர்சின் பிளே ஆப் கனவு சிதைந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் கடைசி லீக்கில் மும்பை இந்தியன்சை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சார்ஜாவில் நடந்த 56-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சுடன் மோதியது. மும்பை அணியில் மூன்று மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, டிரென்ட் பவுல்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தவால்குல்கர்னி, பேட்டின்சன் இடம் பிடித்தனர். இதே போல் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு காயத்தில் இருந்து குணடைந்த அணித்தலைவர் ரோகித் சர்மா திரும்பினார்.
இதன்படி மந்தமான இந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பாட்டம் செய்த மும்பை அணிக்கு திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. தொடக்க வீரர் ரோகித் சர்மா (4 ரன், 7 பந்து), வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மாவின் பந்து வீச்சில் வோர்னரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
சந்தீப் ஷர்மாவின் இன்னொரு ஓவரில் பவுண்டரி, 2 சிக்சர் தொடர்ச்சியாக விரட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் (25 ரன், 13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்த பந்தில் போல்ட் ஆனார்.
இதன் பின்னர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய சூர்யகுமார் யாதவ் 36 ரன்னிலும் (29 பந்து, 5 பவுண்டரி), இஷான் கிஷன் 33 ரன்னிலும் (30 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறியதும் மும்பை தடுமாற்றத்திற்கு உள்ளானது. இதற்கிடையே குருணல் பாண்ட்யா (0), சவுரப் திவாரி (1 ரன்) சுழல் வலையில் சிக்க, மும்பையின் ரன்ரேட் மோசமானது.
பொல்லார்ட் மும்பை அணியை மீட்டெடுத்தார். டி.நடராஜனின் பந்து வீச்சில் ஹட்ரிக் சிக்சர் விளாசினார். அதிரடி காட்டி அணி சவாலான நிலையை எட்டுவதற்கு உதவிய பொல்லார்ட் 41 ரன்களில் (25 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 149 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஐதராபாத் தரப்பில் சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர், ஷபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 150 ஓட்ட இலக்கை நோக்கி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கப்டன் டேவிட் வோர்னரும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் இறங்கினர். இந்த ஜோடியை கடைசி வரை மும்பை பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. ஐதராபாத் அணி 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. கப்டன் வோர்னர் 85 ரன்களுடனும் (58 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்), விருத்திமான் சஹா 58 ரன்களுடனும் (45 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
7-வது வெற்றியை பெற்ற ஐதராபாத் அணி 4-வது அணியாக அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறியது. ஏற்கனவே மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகளும் பிளே-ஆப் சுற்றை எட்டி விட்டன. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் தோற்றால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்சின் கனவு சிதைந்தது.
லீக் சுற்று நிறைவடைந்து விட்ட நிலையில் போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (வியாழக்கிழமை) துபாயில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் 2 இடத்தினை பிடித்த மும்பை- டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளை மறுதினம் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் 3 மற்றும் 4-வது இடத்தை பெற்ற ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.