இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மும்பை டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மும்பை டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை.
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (16 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (14 புள்ளி), பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறினர்.
இந்த நிலையில் டுபாயில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மும்பை கப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இந்த சீசனில் எங்களது மோசமான செயல்பாடாக ஐதராபாத்துக்கு எதிரான கடைசி லீக் அமைந்தது. இந்த ஆட்டத்தில் சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை. இதில் நிறைய தவறுகளை செய்தோம். இந்த தோல்வியை உடனடியாக மறந்து விட்டு பிளே-ஆப் சுற்றில் கவனம் செலுத்துவது அவசியம். நிறைய பிளே-ஆப் சுற்றில் விளையாடிய அனுபவம் எங்களுக்கு உண்டு. அதில் உள்ள நெருக்கடியை அறிவோம். மீண்டும் வலுவான அணியாக ஒருங்கிணைவோம். ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்’ என்றார்.
தற்போது விளையாடும் 8 அணிகளில் ஐ.பி.எல்.-ல் இறுதிசுற்றை எட்டாத ஒரே அணி டெல்லி தான். அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டி வரலாறு படைக்க அருமையான வாய்ப்பு கனிந்துள்ளது. அந்த அணியின் கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், ‘மும்பை இந்தியன்ஸ் மிகச்சிறந்த அணிகளில் ஒன்று. அதே சமயம் நாங்களும் அச்சமின்றி விளையாடக்கூடிய அணியே. அவர்களின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சி முக்கிய பங்கு வகிக்கும். பிற்பகுதியில் பனிப்பொழிவு இருப்பதால் துடுப்பாட்டம் செய்ய எளிதாகி விடுகிறது. அதனால் நாணய சுழற்சியில் ஜெயிக்கும் அணி 2-வது துடுப்பாட்டம் செய்யவே விரும்பும். கடைசியாக நடந்த 9 ஆட்டங்களில் 8-ல் இரண்டாவது பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: ரோகித் சர்மா (கப்டன்), குயின்டான் டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குருணல் பாண்ட்யா, ராகுல் சாஹர், பும்ரா, டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் அல்லது நாதன் கவுல்டர்-நிலே.
டெல்லி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர் (கப்டன்), ரிஷாப் பண்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், அக்ஷர் பட்டேல், அஸ்வின், டேனியல் சாம்ஸ் அல்லது ஹெட்மயர், ரபடா, நோர்டியா
இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு
ஐ.பி.எல். புள்ளி பட்டியலில் முதல்-2 இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பை பெற இரட்டை வாய்ப்பு கிட்டும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறாது. அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது தோல்வி அடையும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் (ஐதராபாத்- பெங்களூரு) வெற்றி பெறும் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.