திறமை, தகுதியின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவு செய்யும்? மங்கள

திறமை, தகுதியின் அடிப்படையில் இலங்கை
எப்போது ஒரு தலைவரைத் தெரிவு செய்யும்?
முன்னாள் அமைச்சர் மங்கள கேள்வி
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டதைப் போன்று இனம், மதம் ஆகியவற்றைப் புறந்தள்ளி திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவு செய்யப்போகின்றது என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஷும் தெரிவாகியிருக்கின்றனர்.
அமெரிக்காவின் முதலாவது பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமையை கமலா ஹரிஸ் தனதாக்கியிருக்கும் நிலையில், உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளது.
அவ்வாறு தனது வாழ்த்துக்களை வெளிப்படுத்தும் விதமான மங்கள சமரவீர தனது ருவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“நம்மைச் சார்ந்த பெண்ணொருவர் உலகிலேயே மிகவும் பலம் பொருந்திய பெண்ணாக மாறியுள்ளமை தெற்காசியாவைச் சேர்ந்த அனைவரும் பெருமிதம் கொள்ளத்தக்க விடயமாகும். இதனைப்போன்று இனம், மதம், சாதி போன்றவற்றை விடுத்து திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவு செய்யப்போகின்றது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.