ஐதராபாத்துடன் மோதிய டெல்லி அணி 17 ஓட்டங்கள் வெற்றி.
2வது தகுதிச் சுற்று போட்டியில் ஐதராபாத் அணியுடன் மோதிய டெல்லி கேபிடல்ஸ் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபியில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
இந்த ஜோடியின் அதிரடியான துவக்கத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 38 ரன்களில் போல்ட் ஆனார். அடுத்ததாக கப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தவானுடன் ஜோடி சேர்ந்தார். களத்தில் அதிரடி காட்டிய ஷிகர் தவான் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
சீரான வேகத்தில் ரன்களை சேர்த்துக் கொண்டிருந்த இந்த இருவரும் ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்களில் பிடி கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் அதிரடியில் கலக்கினார். இதனால் ஓட்ட வேகமாக உயர்ந்தது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்து எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் டெல்லி அணி 20 ஒவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட்(2 ரன்கள்) மற்றும் ஷிம்ரான் ஹெட்மயர்(42 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா, ஹோல்டர் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 2 ரன்களில் போல்ட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ப்ரியம் கார்க் 17 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து வந்த மனீஷ் பாண்டெ 21 ரன்களில் கேட்ச் ஆகி நடையை கட்டினார். அணியின் ரன்வேகம் சற்று குறைந்த நேரத்தில் கனே வில்லியம்சன்(67 ரன்கள்) அதிரடியாக ஆடி ரன் வேகத்தை உயர்த்தினார்.
மறுமுனையில் ஜேசன் ஹோல்டர்(11), அப்துல் சமத்(33), ராஷீத் கான்(11) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.