முதல் பெண்மணியாக நான் இருக்கலாம். ஆனால் நான் கடைசி பெண்மணி இல்லை : கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் டெல்வேரின் வில்மிங்டனில் வைத்து தனது ஆதரவாளர்களிடம் பேசும் போது அமெரிக்காவின் துணைத் தலைவரான முதல் பெண்மணி நானாக இருக்கலாம், ஆனால் கடைசியான பெண்மணி நானாக இருக்காது என்று தெரிவித்தார்.
56 வயதான கமலா ஹாரிஸ் நேற்று (8) அமெரிக்காவின் துணைத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக தனது கட்சியுடன் பேசிக் கொண்டிருந்தார், மேலும் அவரது பேச்சுக்கு சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம் கிடைத்தது.
“இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியாக நான் இருக்கலாம். ஆனால் நான் கடைசி பெண்மணி இல்லை. இன்று, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி, இந்த நாட்டில் எல்லாமே சாத்தியம் என பார்க்கிறாள், ”என்றார் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தும்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் கண்ணீர் வடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கமலா ஹாரிஸ் தனது உரையில், பெண்களுக்கு முழு மரியாதை அளித்து, தனது வெற்றிக்கு வழி வகுத்தவர்கள் பெண்கள் தான் என்று கூறினார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவிற்கு வந்த ஜமைக்கா மற்றும் இந்திய குடியேறியவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை நிற உடையில் தோன்றிய, கமலா ஹாரிஸ் தனது உரையில் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்த அனைவரையும் நினைவு கூர்ந்தார்.
“எங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அது ஒரு போராட்டம். அதற்கு தியாகம் தேவை. ஆனால் வேடிக்கையும் இருக்கிறது. முன்னேற்றமும் இருக்கிறது. ஏனென்றால், எங்கள் எதிர்காலத்தை மாற்றும் சக்தி எங்களுக்கு உள்ளது, ”என ஹாரிஸ் அங்கு மேலும் தெரிவித்தார்.
கமலா ஹாரிஸ் அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக உயர்ந்த பதவியை வகித்த முதல் பெண்மணியாக இடம் பெறுகிறார்.