சமூக, உட்கட்டமைப்பு, அபிவிருத்திக் குழு கலந்துரையாடல்.
ஜனாதிபதி அவர்களின் சிந்தனையில் உருவாகிய கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமூக, உட்கட்டமைப்பு, அபிவிருத்திக் குழு கலந்துரையாடல் இன்று வவுனியாவில் நடைபெற்றது.
மேன்மைதாங்கிய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் தூரநோக்கான சிந்தனைக்கமைய கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைபடுத்தும் நோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழுவின் மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கான விஷேட கலந்துரையாடலொன்று இன்று (09.11.2020) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மக்களை மையப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் அடிப்படையில் சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அரச பொறிமுறையை கிராமத்தை நோக்கி கொண்டு செல்வது இவ்வேலைத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
குறித்த கலந்துரையாடலின் போது வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று மாவட்டங்களினதும் சமூக ,அபிவிருத்தி, உட்கட்டமைப்பு சம்பந்தமான தேவைப்பாடுகள், மக்களின் எதிர்பார்ப்பு சம்பந்தமாகவும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ ,வட மாகாண ஆளுனர் திருமதி. பீ எம்.சார்ள்ஸ், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன, கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவன்ன, சுதேச வைத்திய முறைகள் மேம்பாடு கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர,மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி,அறநெறி பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் ஆகியோருடன் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ,மாவட்ட அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், முப்படை பிரதானிகள் மற்றும் மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.