கொரோனா அச்சுறுத்தலும் முகம் கொடுக்கும் சவால்களும் : கருணாகரன்
கொரோனா தொற்று மிகப் பெரிய அச்சுறுத்தலாகியுள்ளது. தற்போது தொற்றிக் கொண்டிருக்கும் வைரஸ் வலுக்கூடியது. மிகத் தீவிரமானது என்று கூறப்படுகிறது. தினமும் தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு செல்கிறது. மரணத்தின் வீதமும் முதல் தொற்றின்போதையும் விட அதிகமாகியிருக்கிறது. எனவே இந்த நிலையில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற அபாய எச்சரிக்கையை அரச மருத்துவ சங்கம் விடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், ஜனாதிபதியோ மக்களுடைய வாழ்க்கைச் சூழலையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கணக்கிற் கொண்டே செயற்பட முடியும் என்று தெரிவித்திருக்கிறார். முக்கியமாக சாதாரண வாழ்க்கைச் சூழலுக்குள்ளிருக்கும் அடித்தட்டு மக்கள், நாளாந்த உழைப்பாளரின் நிலையைக் கவனத்திற்கொள்வது அவசியம். அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையும் பொருளீட்டல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படாத வகையிலேயே அரசாங்கம் செயற்பட முடியும் என்றிருக்கிறார்.
ஏனென்றால் இது உலகளாவிய சவால். உலகம் முழுவதிலுமுள்ள பிரச்சினை. எல்லா நாடுகளும் கொனாரா வைரஸ் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளன. வல்லரசு நாடுகளே தொடர் முடக்கத்துக்குச் செல்ல முடியாது என்ற நிலையில் உள்ளன. அவசியப்படும் பட்சத்தில் மட்டுமே அப்படிச் செயற்பட முடியும். மற்றும்படி குறைந்தளவிலான நடமாட்டம், பொறுப்புணர்வுடன் கூடிய சமூக இயக்கம் போன்றவற்றையே பின்பற்ற முடியும் என்பது இதன் சாராம்சமாகும்.
இதன்படி மக்களே பொறுப்போடும் விழிப்போடும் செயற்பட வேண்டும் என்று கூறுகிறது அரசாங்கம். அதாவது ஒவ்வொருவரும் தமக்குரிய நோய்த் தடுப்புப் பாதுகாப்பைப் பேணக்கூடிய வகையில் செயற்படுவது அவசியம். முடிந்த வரையில் வெளி நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்வது. அத்தியாவசிய தேவைகள், சேவைகள் போன்றவற்றுக்காக நடமாடுவது. இதற்கேற்ற மாதிரி வாழ்க்கைச் சூழலை மாற்றிக் கொள்வது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.
இதில்லாமல் நாட்டை முடக்கினால் அது அடித்தட்டு மக்களுடைய வாழ்க்கையை மிக மோசமாகப் பாதிப்படையச் செய்து விடும். கூடவே நாட்டின் பொருளாதாரமும் பல பத்து ஆண்டுகள் பின் தள்ளப்பட்டு விடும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு புறக்கணிக்கக் கூடியதல்ல. தொற்றாளர்களைப் பராமரிப்பதற்கான மருத்துவமனைகளை நிர்மாணிப்பது, உரிய மருத்துவ உபகரணங்களை அவற்றுக்கு வளங்குவது, தேவையான மருத்துவ சேவையை வழங்குவது போன்றவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஏற்பாட்டின்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மருத்துவமனைகள் அவசர கதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை தொற்றாளர்களுடன் தொடர்புபட்டோரையும் தொற்றுக்குறித்துச் சந்தேகப்படுவோரையும் வைத்துப் பராமரிக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களும் விரிவு படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்புச் செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை நிவாரணமளித்தல் உள்பட அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலவரங்களைக் கவனிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவையெல்லாம் சரியாக இயங்கினாலும் தொற்றின் வீதம் கூடிச் சென்றால் என்ன செய்வது? முதலில் அதைக் கட்டுப்படுத்தினால்தான் ஏனையவற்றின் மூலம் நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பது மருத்துவ சங்கத்தின் நிலைப்பாடு. எதிர்க்கட்சிகளும் இதையே வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.
அப்படியென்றால் அந்தப் பொறுப்பு மறுபடியும் மக்களையும் அரசாங்கத்தையுமே சேருகிறது. எனவேதான் இதைக்குறித்து நாம் அந்த நோக்கில் சிந்திக்கவும் பேசவும் வேண்டியிருக்கிறது. நாட்டை முழுதாக முடக்காமல் இயக்குவது என்றாலும் அது எளிதான விசயமல்ல. ஏனெனில் சனங்களிடம் தொற்றுக்குறித்த சரியான விழிப்புணர்வும் எச்சரிக்கை நடவடிக்கையும் இல்லையென்றால், தொற்று அதிகரிக்கும். உயிரிழப்பும் கூடுதலாகும். அது நாட்டை இறுதியில் நிர்க்கதி நிலைக்குள்ளாக்கலாம். எனவே எப்படியோ நாம் எல்லோரும் மிகப் பெரியதொரு அச்சுறுத்தலுக்குள்ளும் நெருக்கடிக்குள்ளேயுமே சிக்கியிருக்கிறோம்.
எனவே இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீள வேண்டும். தொடர் நெருக்கடிக்குள்ளும் தொடர் அபாயச் சூழலுக்குள்ளும் தொடர்ந்தும் வாழ முடியாது. அது பல விதமான பாதிப்புகளை உண்டாக்குவதோடு, மன அழுத்தம் கூடிப் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கே தள்ளி விடும்.
எனவேதான் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு ஒரு கூட்டுப்பொறுப்புடைய செயற்திட்டம் இன்று அவசியமாகிறது. இந்தத் திட்டத்தை அரசாங்கம் தனியே உருவாக்க முடியாது. இதற்கு மக்கள் அமைப்புகளும் முன்வர வேண்டும். அரசியற் கட்சிகள், துறைசார் நிபுணர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், மதகுருக்கள் எனப் பலருடைய பங்கேற்பும் அவசியம். ஏனைய காலங்களைப்போலவோ, ஏனைய சந்தர்ப்பங்களைப்போலவோ இதையெல்லாம் கூட்டம் கூடி ஆராய்ந்து, திட்டம் தீட்டிச் செயற்படுத்த முடியாது. பதிலாக வேறுபட்டதொரு பொறிமுறையின் வழியாக இதைச் செயற்படுத்த வேண்டும்.
முதலில் மக்களுக்குச் சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே இதைக்குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது போதாது. குறிப்பாக, முகக்கவசத்தை அணிந்து செல்வதையே பலரும் தவிர்க்க முற்படுகின்றனர். அப்படி முகக் கவசத்தை அணிவதாக இருந்தாலும் அதை ஏதோ தண்டனைக்காக அணிய வேண்டும் என்ற உணர்வுடனேயே பலரும் கருகின்றனர். பல இடங்களிலும் பொலிசார், படையினர் போன்றோருக்கு அஞ்சியே முகக் கவசத்தை அணிகின்றனர். அல்லது வங்கி, அரச திணைக்களங்கள், கொடுப்பனவு நிறுவனங்கள் போன்றவற்றுக்குச் செல்லும்போது மட்டுமே கைகளைக் கழுவுகின்றனர். மாஸ்க்கை அணிகின்றனர். மற்றும்படி அலட்சியப்போக்கே பலரிடத்திலும் காணப்படுகிறது. பலரும் நிலைமையின் விபரீதத்தை உணராமல் வழமையைப்போலவே நடமாடுகின்றனர். விழாக்கள், கொண்டாட்டங்கள், பண்டிகைகளை அமர்க்களமாகச் செய்ய முயற்சிக்கின்றனர். இது எவ்வளவு தவறானது? ஆபத்தானது? தங்களையும் நெருக்கடிக்குள்ளாக்கிச் சமூகத்தையும் அபாயத்திற்குள் தள்ளுவதாகிறது அல்லவா!
இதற்கு நிச்சயமாகத் தண்டனை நடவடிக்கைகள் வேண்டும். ஆனால், அதைச் சாத்தியப்படுத்துவது என்பது சாத்தியமே இல்லை. ஏனென்றால் அதற்கு அரசாங்கத்தினால் முடியவே முடியாது. மக்கள்தான் இதைச் செய்ய வேண்டும். அப்படியென்றால், மக்கள் என்ன செய்ய வேண்டும்? மீறிச் செயற்படுவோர் மீது மக்கள் அடிதடிக்குச் செல்ல முடியாது. அப்படிச் சென்றால், அது முடிவற்ற வன்முறையாகி விடும். மட்டுமல்ல, இலங்கையின் இன முரண்பாட்டுச் சூழலில் இதனால் இனக்கவரங்களே உருவாகி விடக்கூடிய நிலையும் உண்டு.
ஆகவே இதற்கெல்லாம் இடமளிக்காமல் நமக்கு நாமே பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக மக்கள் அமைப்புகளும் மத நிறுவனங்களும் செயற்பாட்டாளர்களும் இதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கிராமங்களில் என்றால், அந்தந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அமைப்புகளும் செயற்பாட்டியக்கங்களும் மத அமைப்புகளும் இதைச் செய்ய வேண்டும். நகரங்களில் ஒவ்வொரு தெருவிலுமாக இதைச் செய்ய வேண்டும். மக்கள் முடிந்த வரையில் நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்வது. வெளியே செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றுவது. விழாக்கள், பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தவிர்த்துக் கொள்வது என்றவாறாக.
இதற்கு ஒரு அடையாளமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனும் சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமாரும் தீபாவளிக்கொண்டாட்டங்களை வீடுகளில் இருந்து கொண்டே அமைதியாகக் கொண்டாடுமாறு மக்களைக் கேட்டிருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டியது. இப்படி ஒவ்வொரு தரப்பினரும் கேட்டுக் கொள்வதும் அதைக் கண்காணித்து வழிப்படுத்துவதும் அவசியமாகும்.
ஆனால் எமது சூழலில் உள்ள மக்கள் அமைப்புகளின் குணாம்சமும் பொறுப்புணர்வும் இன்று மாறி விட்டது. முன்னர் மக்கள் அமைப்புகள், கிராம முன்னேற்றச் சங்கங்கள் என்றால் அவை அந்தந்தக் கிராமங்களின் முன்னேற்றம், சூழல் பாதுகாப்பு, சமூக நலன் என்ற அடிப்படையில் செயற்படும். இதில் ஏதாவது குழப்பங்கள் நிகழுமாக இருந்தால் அவற்றை முன்னின்று கட்டுப்படுத்தி விடும். இப்பொழுது அந்த நிலை இல்லை. பதிலாக அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் வழங்கும் நிதி மற்றும் உதவித்திட்டங்களைச் செயற்படுவதுடன் மட்டுப்பட்டு விட்டன. சில இடங்களில் புலம்பெயர் சமூகத்தின் உதவிகளைப் பெறுவதோடு சரி. இதிலும் ஊழல்களும் குறைபாடுகள், முறைகேடுகளுமே அதிகம்.
இதனால் இந்த அமைப்புகள் பெரும்பாலும் அவற்றின் மதிப்பை இழந்து விட்டன. அல்லது செயற்றிறனை இழந்து நிற்கின்றன. இந்தச் சூழலில் இவற்றின் குரலைச் செவிகொள்வதற்கு மக்கள் தயாரா என்ற கேள்வி எழலாம். ஆனால், வேறு வழியில்லை. இவைதான் இன்றைய நிலையில் இந்தக் கொரோனா தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அதிகமாகப் பங்கேற்றும் இளைஞர் மன்றங்கள், விளையாட்டுக்கழகங்கள் போன்றவை. இவை ஏனைய அமைப்புகளுடன் இன்றைய தொடர்பாடல் சாதனங்களுக்கூடாக இந்த விழிப்புணர்வைச் செய்யலாம். முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இதைக் கூடுதலாகச் செயற்படுத்த முடியும்.
தேவைப்படும் உதவிகள், குறித்த இடங்களில் உள்ள இடர்ப்பாடுகள், அங்கே உள்ள நிலைமை, அங்கே தேவைப்படும் விவரங்கள் போன்றவற்றைக் கூட இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தொடர்பாடலின் வழியாகச் செயற்படுத்த முடியும். அதாவது இந்த இடர்நிலையை எதிகொள்வதற்கு புதியதொரு வலையமைப்புப் பண்பாடு உருவாக்கப்பட வேண்டும். இந்த வலையமைப்பும் இந்தச் செயல் முறையும் எதிர்காலத்தில் பல நல்ல விடயங்களுக்கே பயன்படும்.
ஆகவே, இன்று தேவைப்படுவதெல்லாம், ஒருங்கிணைந்து அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரு பொறிமுறைப் பண்பாடேயாகும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். மக்கள் இருந்தாலே சமூகம். சமூகமிருந்தாலே நாடு. நாடு நல்லபடியிருந்தால்தான் பாதுகாப்பும் நல் வாழ்க்கையும். இதற்கெல்லாம் நாம் ஒவ்வொருவரும் ஆற்றியளிக்கும் நற்செயல்களும் பொறுப்புமே வழியேற்படுத்தும்.