நான் விலகப்போவதில்லை, முடிந்தால் விலக்கி பார்க்கட்டும் : சஜித் அணிக்கு டயானா சவால்
ஐக்கிய மக்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து ஒருபோதும் விலகுவதற்கு தயாரில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ என்னதான் கூறினாலும் தன்னை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்க முடியாது என டயனா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
வேறு கட்சியில் உறுப்புரிமை பெறும் நோக்கம் இல்லை எனக்கூறிய டயனா, ஐக்கிய மக்கள் சக்தியில் தானும் தனது கணவரும் வகித்த பதவிகளை இராஜிநாமா செய்துள்ளதாகக கூறினார்.
அப்பே ஜனதா பக்சய என்ற கட்சியின் தலைவராக சேனக சில்வாவும் பொதுச் செயலாளராக டயனா கமகேவும் செயற்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தலைவராக சஜித் பிரேமதாஸ, பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில் டயனா கமகே உப செயலாளராகவும் சேனக சில்வா உப தலைவராகவும் இருந்தனர்.
இந்நிலையில் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்து டயனா கமகே அரசாங்கத்தின் ஆதரவாளராகி அரசு பக்கம் சென்றதால் கட்சி பதவியில் இருந்து மட்டும் விலகியுள்ளார்.
எனினும் டயனா கமகேவிற்கு எதிராக இதுவரை எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதுவும் சஜித் தரப்பால் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் அந்த கட்சி அவரது கணவரான சேனக சில்வா பெயரில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.