யாழ்ப்பாணத்தில் முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் நாளை விடுவிப்பு

யாழ்.மாவட்டத்தில் இராஜகிராமம், குருநகர் மற்றும் திருநகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் அமுலில் இருந்த  முடக்கல் நிலை நாளை புதன்கிழமை காலையில் இருந்து நீக்கப்படவுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

அண்மையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இராஜகிராமம், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குருநகர், திருநகர்  ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்று வந்ததன் காரணமாக சிலர் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தார். குறித்த தொற்றாளர்கள் அக்கிராமங்களில் நடமாடி இருந்ததால் அக்கிராமங்களிலிருந்து யாரும் வெளியே செல்லாதவாறும், அக்கிராமங்களுக்குள் புதிதாக எவரும் உள்நுழையாதவாறும்  சுகாதாரப் பிரிவினரால் முடப்பட்டிருந்தது.

தற்போது அந்தக் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின்படி புதிதாக எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் நாளை (11) காலையிலிருந்து குறித்த மூன்று கிராமங்களும் முடக்க நிலையிலிருந்து நீக்கப்படுகின்றன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.