கிளிநொச்சியில் 310 பேர் சுயதனிமைப்படுத்தலில் – மாவட்ட அரச அதிபர் தகவல்
கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் நபர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து 310 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய கொரோனாத் தொற்று நிலைமை தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜெயபுரம் பகுதியில் கொழும்பில் தொழில்புரிந்து வீடு திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தலுக்குட்பட்ட நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் 310 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புபட்ட குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் குடும்பத்தினருக்கான பி.சி.ஆர். பரிசோதனை நிறைவடைந்து தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உலர் உணவுப் பொதிகளை நான்கு பிரதேச செயலகமும் வழங்கி வருகின்றன. இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் 197 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோன்று மாதாந்த சிகிச்சைக்காக வைத்தியசாலை வரும் நோயாளர்களுக்கு குறிப்பாக வயோதிபர்களுக்கு வீடுகளுக்கு மருந்துகள் அனுப்பிவைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் கொரோனாத் தொற்று நிலைமை சுகாதாரத் தரப்பினரின் அறிக்கையின்படி ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் மக்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.