அரசின் வரவு – செலவுத்திட்டம் மீது டிசம்பர் 10ஆம் திகதி வாக்கெடுப்பு!

 

சபையில் 19 நாட்கள் விவாதம்

2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை 19 நாட்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் முன்னெடுக்கப்படவிருப்பதுடன், நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

அதன் பின்னர் நவம்பர் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நிறைவுபெறும். அன்றையதினம் பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்றுக் கூடிய நாடாளுமன்றம் அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

வரவு – செலவுத்திட்ட விவாதத்தின்போது சபை அமர்வுகள் தினமும் 9.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 5.30 மணிவரை முன்னெடுக்கப்படும். நவம்பர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்துக்காக ஒதுக்கப்படவிருப்பதுடன் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதிவரையான காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்காக முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10 மணி வரையும் நேரம் ஒதுக்கப்படும்.

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஸ்மன் கிரியல்ல, அமைச்சர்களான நிமல் சிறிபால டி. சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அலகப்பெரும, பிரசன்ன ரணதுங்க, வாசுதேவ நாணயக்கார, அலி சப்ரி ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், டிலான் பெரேரா, அனுர திஸாநாயக்க மற்றும் மனோ கணேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.