அரச கொள்கையின் அடிப்படையில் கொரோனாவை கையாள வேண்டும் :பிள்ளையான்

அரச கொள்கையின் அடிப்படையில்
கொரோனாவை கையாள வேண்டும்

இப்படிக் கூறுகின்றார் பிள்ளையான் 

“உலகளாவிய ரீதியில் சவாலாக இருக்கின்ற கொரோனா மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் வந்திருக்கின்றது. இதனை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய விடயங்களையும் எப்படி முன்னெடுப்பது என்ற பொதுவான கொள்கைத் திட்டத்துக்கு உழைக்க வேண்டும்.”

– இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கான காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று (11) சி.சந்திரகாந்தன் திறந்துவைத்து கடமைகளைப் பெறுப்பேற்ற பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளேன். இந்த இடத்துக்கு வருவதற்கு பெரும் பங்காற்றிய எனது மக்களுக்கு நன்றி. தேர்தல் காலங்களில் மக்களிடம் அபிவிருத்தி செய்து தருவாக வாக்குறுதியளித்துத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கின்றோம்.

தற்போது உலகளாவிய ரீதியில் சவாலாக இருக்கின்ற கொரோனா மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் வந்திருக்கின்றது. இந்த விடயங்களை அரச கொள்கையின் அடிப்படையில் கையாண்டு சாதாரண மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் அவர்களுடைய உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய விடயங்களையும் எப்படி முன்னெடுப்பது என்ற பொதுவான கொள்கைத் திட்டத்துக்கு உழைக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

அந்த அடிப்படையில் கொரோனாத் தொற்றைத் தடுத்து மக்களைப் பாதுகாத்துக்கொண்டு அதனோடு எங்களுடைய கிராமிய பொருளாதாரத்தை வளர்தெடுப்பது எங்கள் நோக்கம். அந்தத் திட்டத்துக்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.

நீண்ட காலமாக நான் நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத காரணத்தால் இன்று கடமைகளைப் பெறுப்பேற்றவுடன் நிலைமைகளை அவதானித்துக் கொண்டு நாளை பெரும் விமர்சனத்தின் மத்தியில் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தை நடத்தவுள்ளோம்.

அந்தக் கூட்டத்தில் முடிந்த வரை 2021ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகளையும் இப்போது இருக்கின்ற மக்களுக்கு உடனடித் தேவையான விடயங்களையும் அவதானித்து அதனை முடித்துக் கொடுப்பதற்கான திட்டங்களை வகுப்போம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.