ஐ.எஸ். அமைப்பினர்கள் எவரும் இலங்கைக்குள் நுழையவில்லை : ‘த சன்’ செய்தியை அடியோடு நிராகரித்தார் இராணுவத் தளபதி
– பிரிட்டனின் ‘த சன்’ செய்தியை அடியோடு
நிராகரித்தார் இராணுவத் தளபதி
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர் என வெளியான தகவல்களை இலங்கை இராணுவம் அடியோடு நிராகரித்துள்ளது.
பிரிட்டனின் ‘த சன்’ செய்தித்தாளில் வெளியான செய்தியை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
அவ்வாறான ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என ‘த சன்’ செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். இழந்த பின்னர் மிகவும் ஆபத்தான ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று ‘த சன்’ செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தீவிரமாகச் செயற்படும் நாடுகளின் விபரங்களை வெளியிட்டுள்ள ‘த சன்’ செய்தித்தாள் இலங்கையும் அதிலொன்று எனக் குறிப்பிட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தனது சாம்பலில் இருந்து மீண்டும் எழுகின்றது. சர்வதேச அளவில் கொலைகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபடுகின்றது என ‘த சன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
மொஸாம்பிக்கின் வடபகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தாக்குதலில் 50 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை ‘த சன்’ சுட்டிக்காட்டியுள்ளது.