கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி.

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தற்காலிக வீட்டின் சுவர் ஈரமடைந்து இன்று காலை விழுந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பதிவாகியுள்ளது. தாயார் உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்த சிறுவன் உணவருந்திக் கொண்டிருந்துள்ளான் இதன்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். வைதியசாலையில் சிகி்ச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 8 வயதான நிரோயன் றுசாந்தன் என்ற சிறுவனே பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்குவது தொடர்பான பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வருடம் தோறும் 40 குடும்பங்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.