மக்களின் விழிப்புணர்வே கொரோனாவிலிருந்து தப்ப ஒரே வழி!
மக்களின் விழிப்புணர்வே கொரோனாவிலிருந்து தப்ப ஒரே வழி!
மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டால் கொரோனாத் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
சாவகச்சேரி பஸ் தரிப்பு நிலையத்தில் எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் தென்மராட்சி சேவை நிறுவனத்தினரால் விழிப்புணர்வுச் செயற்பாடு கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டது. மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த முகக் கவசங்களை வழங்குகின்றோம். கனடாவில் உள்ள அகிலன் என்பவர் தனது பிறந்தநாளில் இதனை ஏற்பாடு செய்துள்ளார்.கொரோனா தொற்று நிலைமை முன்னெப்போதும் இல்லாதவாறு தீவிரம் பெற்றுள்ளது. கொரோனா தொற்றுத் தொடர்பாக எமது மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தாலும், அது போதுமானதாக இல்லை.
வடக்கில் இதுவரை கொத்தாணித் தொற்றோ, சமூகத் தொற்றோ ஏற்படவில்லை. எமது பிரதேச சுகாதாரத் துறையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.சுகாதார அமைச்சும், சுகாதாரத் திணைக்களமும் கூறுகின்ற அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். சுகதார நடைமுறைகளை சரியாகக் கடைப்பிடித்தால் கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம். சுகாதாரத் துறையினருக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க வேண்டும். – என்றார்.