கொரோனாவின் தாக்கத்தோடு சிங்கள சினிமாவும் மரணிக்கிறது
இலங்கை சினிமா 1947 திரைப்படமான கடவுணு பொறொன்துவ (Broken Promise) தவறிய சத்தியம் என்பதிலிருந்து தொடங்குகிறது.
இலங்கை சினிமாவின் முதல் 9 ஆண்டுகளில், பெரும்பாலான படங்கள் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டன.
அவை இந்திய திரைப்படங்களின் கொப்பிதான். அதாவது இந்திய திரைப்படங்களை சிங்களத்தில் எடுத்திருப்பார்கள். அதில் அதிகமானவை தமிழ் திரைப்படங்களாகும். தமிழ் படங்களின் கதையை அப்படியே சிங்கள நடிகர்களை வைத்து நடிக்க வைத்திருப்பார்கள். அன்று ரீமேக்கிங் என அழைக்காத காலம். ஆனால் அதுதான்.
இப்பொழுதும் அதேபோல் நடக்கத்தான் செய்கிறது.
சிங்கள சினிமாவின் பிறப்பு 1956 ஆம் ஆண்டு ரேகாவ (ரேகை) திரைப்படத்துடன் தொடங்கியது.
1970 கள் சிங்கள சினிமாவின் பொற்காலம் என்று கருதப்படுகிறது.
1997 ஆம் ஆண்டில், சிங்கள சினிமாவின் 50 வது ஆண்டுவிழா
ஒரு மாநிலக் குழு சிங்கள சினிமாவின் 50 ஆண்டு வரலாற்றில் 10 சிறந்த படங்களை தேர்வு செய்தது.
அவை பின்வருமாறு.
1- நிதானய (புதையல்) : லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் – 1972
2- கம் பெரலிய (கிராம புரட்சி) : லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் – 1963
3- விராகயா : திஸ்ஸா அபேசேகர – 1987
4- பம்பரு எவித் (குளவி வந்துவிட்டது) : தர்மசேன பதிராஜா – 1978
5- சத் சமுத்ர (ஏழு கடல்கள்) : சிரி குணசிங்க – 1967
6- துன்மன் சந்திய (முச் சந்தி) : மகாகம சேகரா – 1970
7- பளங்கெட்டியோ (வெட்டுக்கிளிகள்) : வசந்தா ஒபீசேகர – 1979
8- தடயம (வேட்டை) : வசந்த ஒபேசேகர – 1984
9- ரேகாவ (ரேகை) : லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் – 1956
10- பரசத்து மல் : காமினி பொன்சேகா – 1966
10-வெலிகத்தர : டி.பி. நிஹால்சிங்க – 1970
மேலும், யசபாலிதா நானாயக்காரா மற்றும் லெனின் மோராயஸ் ஆகியோர் வணிக சினிமா மூலம் சினிமாக்களை நிரப்பிய ஒரு சகாப்தமும் இருந்தது.
ஒரு காலத்திற்கு, சிங்கள சினிமா இரண்டு பீரிஸின் கைகளில் இருந்தது.
ஒருவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்.
மற்றவர் சுனில்சோம பீரிஸ்.
லெஸ்டர் எங்கள் படத்தின் தரத்தை மேம்படுத்தினாலும், சுனில்சோம அதன் எண்ணிக்கைகளை அதிகரித்தார்.
எதையும் செய்ய முடியாத இயக்குநர்கள் பலர், மருந்து கசாயம் காய்ப்பது போல 4 படங்களை எடுத்து 4க்கு 1 என வற்ற வைத்து ஒரு படமாக்கும் இயக்குனர்களாக திகழ்ந்தனர். அதாவது தமிழ், இந்தி மற்றும் மேற்கத்திய படங்களை காபி அடித்து கலவையாக்கி திரைப்படங்களை உருவாக்கி, தங்கள் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொண்டனர்.
சிங்கள மக்கள் இந்திய படங்களை பார்க்காத காலத்தில் அவர்களுக்கு அது சிங்கள படமாகவே தெரிந்தது. இந்த நிலை இந்திய தமிழ் சினிமாவில் இன்றும் இல்லாமல் இல்லை. இணையம் வந்த பின் நெட்டிசன்கள் இவற்றை கொண்டு வந்து கலாய்க்கிறார்கள்.
அன்று தமிழ் அல்லது இந்தி பேசாத சிங்கள பார்வையாளர்களுக்காக படங்களை இந்திய படங்களை நகலெடுத்து சிங்கள படங்களை உருவாக்கிய பெருமை உதயகாந்தவுக்கு உண்டு.
பிரசன்ன ஜெயகொடி ‘சங்கரா’ என்ற திரைப்படத்தை வித்தியாசமாக கிளாசிக்கல் திரைப்படம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
புதிய சிங்கள வணிக சினிமா அசோக ஹந்தகம, பிரசன்ன விதானகே மற்றும் விமுக்தி ஜெயசுந்தர ஆகியோருடன் தொடங்குகிறது.
இது ஒரு புதிய கமர்ஷியல் வித படங்கள் என்று கூறப்பட்டாலும், இந்த படங்களை பார்க்க மக்கள் திரண்டு வரவில்லை.
‘மல்யுத்த’ கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த படங்களில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பின்னணிகளில் உருவானவையாகும்.
எனவே மக்கள் திரையரங்குகளுக்கு வராது போனாலும் நஷ்டம் இல்லை. அதற்கான பங்களிப்புகள் அதிகமாக NGOக்களினதாகும்.
இன்றுவரை சிங்கள சினிமாவில் மிகவும் மோசமான இயக்குனர் சனத் அபேசேகரதான்.
நாட்டின் வரலாற்றையும் அழித்து , பௌத்தத்தத்தை அழித்து , சிங்கள சினிமாவில் எஞ்சியதை எல்லாம் அழித்த பின்னரே அவரது திரைப்பட வாழ்க்கை முடிவடையும்.
அவ்வப்போது நல்ல காலங்கள் சிங்கள சினிமாவுக்கு வந்தன.
காமினி, விஜய மற்றும் மாலினி காலங்கள் அவற்றில் முக்கியமானவை.
சிங்கள சினிமாவின் மோசமான சகாப்தம் சனத் குணதிலக்கவிலிருந்து தொடங்கி ரஞ்சன் ராமநாயக்கவுடன் முடிவடைகிறது.
உலகம் முழுவதற்கும் கொரோனா தொற்றிக் கொள்வதற்கு முன்னர் சிங்கள சினிமாவுக்கு கொரோனா பிடித்துவிட்டது.
முதல் கொரோனா 1971 இல் ஜேவிபி. கிளர்ச்சியுடன் ஆரம்பித்தது.
இரவு 9.30 நிகழ்ச்சியைப் பார்த்து வீடு திரும்பும் வழியில், காவல்துறையினர் சோதனை செய்தபோது, என் சட்டைப் பையில் திரைப்பட டிக்கெட் இல்லையென்றால், போலீசாரின் கூட்டுக்குள் இருக்க வேண்டி வந்தது.
71 காலப் பகுதியில் உழைக்கும் மக்களின் ஒரே ஒரு பொழுது போக்காக இருந்த இரவு 9.30 சினிமாவை பார்க்க செல்லும் மக்கள் அப்படி போவது இல்லாமல் போனது. இரவில் போலீசார் பிடித்து உள்ளே தள்ளுவார்கள் என நினைத்து சினிமாவுக்கு போவதை குறைத்துக் கொண்டார்கள்.
இரண்டாவது கொரோனா ஏப்ரல் 15, 1979 இல் இன்டிபென்டன்ட் டெலிவிஷன் நெட்வொர்க் (ஐ.டி.என்) தொலைக்காட்சி சேவையை அறிமுகப்படுத்தியதோடு தொடங்கியது. சினிமாவுக்கு போவதை குறைத்துக் கொண்டு தொலைக் காட்சி பார்க்க தொடங்கினார்கள்.
1982 ஆம் ஆண்டில் தேசிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டதும், பழைய சிங்கள படங்கள் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு காட்டப்பட்டதும் நிலைமை மேலும் மோசமடைந்தது.
அந்த நேரத்தில் கிராமங்களில் இரண்டு அல்லது மூன்று கருப்பு / வெள்ளை தொலைக்காட்சி பெட்டிகள் மட்டுமே இருந்தன.
வெள்ளிக்கிழமை இரவு வாக்கில், அந்த வீடுகள் தானாக மினி-சினிமா தியேட்டர்களாக மாறின.
புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும் முதல் வெள்ளிக்கிழமைகளில் சிங்கள படங்களை தொலைக்காட்சியில் காண்பிப்பது ஈடுசெய்ய முடியாத தவறானது.
ஜூனியஸ் ரிச்சர்ட் (ஜேஆர்) ஜெயவர்தன காலம் சிங்கள சினிமாவை அழித்த மற்றொரு கொரோனா கருப்பு ஜூலை 1983 ஆகும்.அது தமிழருக்கு எதிரான இனக் கலவரமாக ஆரம்பித்தாலும் சிங்கள சினிமாவும் அழிந்து போனது.
ஸ்டுடியோக்கள் தீப்பிடித்தன.
சினிமாக்களை பாதுகாத்து வந்த சினிமா ஸ்டூடியோக்கள் (லைப்பரரிகள்) தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. சினிமா ஸ்டூடியோக்கள் தமிழருக்கு சொந்தமானவையாக இருந்தன. ஆனால் சிங்கள சினிமாக்கள் சிங்கள மக்களின் பொக்கிசங்களாக இருந்தன. ஆனால் அத்தனையும் எரிந்து சாம்பலாயின. இதில் இலங்கை தமிழ் சினிமாக்களும் எரிந்து இல்லாமல் போயின.
எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கை நாட்டின் சினிமா வரலாறு தீப்பிடித்து எரிந்து போனது.
சிங்கள சினிமா நெருக்கடி குறித்து ஆராய பேராசிரியர் ஏ.ஜே. குணவர்தன தலைமையில் ஒரு ஆணையத்தையும் ஜனாதிபதி ஜெயவர்த்தனே நியமித்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான நாளில், பேராசிரியர் குணவர்தன தேங்காய் தூள் ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்கம் வரிச்சலுகைகளை வழங்குவதாகவும், உள்ளூர் சினிமாவுக்கு அரசாங்கம் அத்தகைய உதவிகளை வழங்காது என்றும் கூறினார்.
அவ்வளவுதான்.
கமிஷன் அறிக்கை இன்னும் பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது.
இப்போது சிங்கள சினிமா 2020 இல் கொரோனாவின் இறுதி கட்டத்தை எதிர்கொள்கிறது.
ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போக்கு மக்களிடம் காண முடியவில்லை , அது இப்போது முடிந்துவிட்டது.
திரைப்பட அரங்குகளை டியுசன் சென்டர்களாக மாற்றி சிங்கள சினிமாவுக்கு மண் அள்ளிப் போடுவதே மிச்சமாக உள்ளது.
(சிங்கள சினிமாவுக்கு OTT அரங்கு கிடைக்ககவில்லை. சிலர் முயன்று வருகிறார்கள்.)
– அட்டமெஸ்ஸா எழுதியது : தமிழில் ஜீவன்
நன்றி : LNW