செல்வச்சந்நிதியான் ஆலயம் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதியான் ஆலயம் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முடக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆலயங்களில் 5 நபர்களுக்கு மேல் வழிபாடுகளில் ஈடுபட தடைவிதிக்கும் அறிவித்தல் இலங்கை சுகாதார அமைச்சகத்தினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கமைவாக வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதான அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை என்பதால் ஏராளமான பக்தர்கள் செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு சென்று விசேட வழிபாடுகளை நடத்த ஒன்று கூடுவது வழமையாகும்.
இந்நிலையிலேயே, பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பக்கதர்கள் யாரும் ஆலயத்திற்குள் நுழைய முடியாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதர அமைச்சின் அறிவுறுத்தலையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஒரே நேரத்தில் 5 பேர் மட்டும் ஆலயங்களில் வழிபாடு நடத்தலாம் என்ற சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தரப்பினரால் ஆலய நிர்வாகத்தினருக்கு எடுத்துக் கூறப்பட்டதாகவும், அதற்கமைவாக ஆலய பூசகர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் பூசை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் பக்தர்கள் எவரையும் உள்செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்திருவிக்கப்பட்டது.
முன்னதாக செல்வச்சந்நிதியான் ஆலய வளாகத்தில் உள்ள சந்நிதியான் ஆச்சிரமம் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்டதாக குறிப்பிட்டு முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ளவர்கள் 14 நாட்களுக்கு ஆச்சிரமத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.