நம்மவரா கமலாதேவி ஹாரிஸ்? : சுவிசிலிருந்து சண் தவராஜா
அதிகாரத்தில் இருப்போரோடு அல்லது புகழ் வெளிச்சத்தில் இருப்போரோடு தம்மை அடையாளப்படுத்துதல் வெகுமக்களின் பண்புகளுள் ஒன்று. தமிழ் மக்களிடத்தே இத்தகைய பண்பு சற்று தூக்கலாகவே உள்ளது எனக் கூறிவிட முடியும்.
ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தமிழ் மண்ணில் முளைவிட்ட காலகட்டத்தில் போராளிகளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தமிழ் மக்கள், 1986 இல் விடுதலைப் புலிகள் சக இயக்கமாகிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களை – தாம் அன்றைய தினம்வரை தலையில் வைத்துக் கொண்டாடிய ஒரு சாராரை – படுகொலை செய்த வேளையில் ஒப்புக்கேனும் ஒரு கண்டனத்தைக் கூடப் பதிவு செய்யாதது மட்டுமன்றி, அன்றிலிருந்தே விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளவும் தொடங்கிவிட்டார்கள்.
23 வருடங்களின் பின்னர் 2009 இல் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் துடைத்தழிக்கப்பட்டபோது, உலகின் பல நாடுகளிலும் புலம்பெயர் தமிழர்கள் வீதிகளில் இறங்கி அழுது புரண்டபோது, ஈழ மண்ணில் இருந்து ஒரு அனுதாபக் குரலோ, வெளிப்படையான கண்டனக் குரலோ வெகுமக்கள் மத்தியில் இருந்து எழவே இல்லை.
“சாய்ந்தால், சாய்கிற பக்கம் சாய்கிற செம்மறி ஆடுகளாகவே” மக்கள் இருக்கிறார்கள் என்பது யதார்த்தமே ஆயினும் மக்களை மாத்திரம் தனித்துக் குறை சொல்லிவிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது. மக்களை வழிநடத்தும் தலைவர்களிடமே மக்களின் நடத்தைகளுக்கு வகை கூறவேண்டிய பொறுப்பு உள்ளது.
சொந்தம் கொண்டாடும் தமிழ்நாடும், ஈழமும்
தற்போது அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு துணை அரசுத் தலைவியாகத் தெரிவு செய்யப் பட்டிருக்கும் கமலாதேவி ஹாரிஸ் அவர்களோடு தம்மை அடையாளப்படுத்த தமிழ்நாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தயாராகி விட்டார்கள். அவரின் தாயாரின் பூர்வீகக் கிராமமான துளசேந்திரபுரத்தில் கமலாதேவியின் தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்து, சுவரொட்டிகள் வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள்.
மறுபுறம், ஈழத் தமிழர்களில் ஒருசிலர் கமலாவின் பூர்வீகம் இலங்கை என்றெரு கட்டுக்கதையைப் பரப்பி அவரோடு தம்மை அடையாளப்படுத்த முயற்சித்து அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். சாமானியர்கள் மட்டுமன்றி ஒருசில ஊடகவியலாளர்கள் கூட இந்தக் கட்டுக்கதையை உண்மையென்று நம்பி இருப்பதைப் பார்க்கும்போது சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.
சாதாரணமாக கூகுள் தேடுபொறியில் கிடைக்கும் விடயத்தைக் கூடக் கண்டறியமுடியாத அறிவாளிகளாக(?) இருக்கும் இத்தகைய ஊடகர்கள் தமக்கு வழிகாட்டுவார்கள் என ஒரு சமூகம் நம்பியிருப்பதை என்னவென்று சொல்வது?
எதுவாக இருந்தாலும், தமிழர்கள் – இலங்கையிலோ, இந்தியாவிலோ – சொந்தம் கொண்டாடுவது போன்று அல்லது சொந்தம் கொண்டாட முயல்வது போன்று கமலா ஹாரிஸ் நம்மவர்தானா? நாம் அவரை நம்மவர் என்று சொந்தம் கொண்டாடினாலும் எம்மோடு சொந்தம் கொண்டாட அவர் தயாராக இருக்கிறாரா?
பைடனுக்கு தாராமாக அள்ளித் தந்த பெரு நிறுவனங்கள்
புதிய அமெரிக்க அரசுத் தலைவரான ஜோ பைடன் அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார் என ஊடகங்கள் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றன. அவை சொல்லாமல் விடுகின்ற ஒரு சேதி அல்லது மறைத்துவிட விரும்புகின்ற ஒரு சேதி, அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் அதிகூடிய தொகையை தேர்தல் நிதியாகப் பெற்றவர் ஜோ பைடன் என்பதையே. Center of Responsive Politics என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் ஜோ பைடன் 1.183 பில்லியன் டொலரை தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளார். நடப்பு அரசுத் தலைவராக உள்ள போதிலும், டொனால்ட் ட்ரம்பினால் 808 மில்லியன் டொலரையே தேர்தல் நிதியாகப் பெற முடிந்தது.
ஜோ பைடனுக்கு இத்துணை தொகைப் பணம் தேர்தல் நிதியாக பன்னாட்டு வணிக நிறுவனங்களால் வழங்கப்படுகின்றது என்றால், அவை ஜோ பைடனிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கின்றன என்பதே அர்த்தம். எனவே “நக்கினார் நாவிழந்தார்” என்ற சொலவடைக்கு ஒப்பாக பன்னாட்டு வணிக நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு பைடன் மற்றும் கமலா நிர்வாகம் செவிசாய்த்தே ஆக வேண்டும்.
ட்ரம்ப் அவர்களால் அமெரிக்காவிற்கு உலக அரங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள கெட்ட பெயரை(?)ச் சரி செய்வது ஒருபுறம் இருக்க, ட்ரம்ப் அவர்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யுத்தங்களையும் வெகு விரைவில் தொடங்க வேண்டிய கடப்பாடு பைடன் நிர்வாகத்திற்கு உள்ளது. அதன் மூலமாகவே தேர்தலுக்கு பெருமளவில் நிதி வழங்கிய ஆயுத வியாபாரிகள் இலாபம் ஈட்ட முடியும். எனவே, அடுத்த நான்கு வருடங்களுக்கு உலகில் யுத்தச் செய்திகளுக்கும், அகதிகளுக்கும் பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
என்ன செய்வார் கமலா?
கடந்த காலங்களில் மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் பற்றிப் பேசிய கமலாதேவி இனி என்ன செய்வார்? ஜோ பைடனோடு அருகில் அமர்ந்திருந்து கைதட்டி ரசிப்பதை விட அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்? (2011 மே 2 இல் பாகிஸ்தானில் பின் லாடன் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட போது ஒபாமாவின் அருகே அமர்ந்திருந்த அப்போதைய வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைதட்டி ரசித்ததை அவ்வளவு இலகுவில் உலகம் மறந்திருக்க வாய்ப்பு இல்லை.)
உள்நாட்டில் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள உடனடிச் சவால்கள் இரண்டு. ஒன்று கொரோனாக் கொள்ளை நோய், மற்றையது ஜோர்ஜ் புளைட் அவர்களின் கொலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் காவல்துறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்.
கொரோனாவுக்கான மருந்து கண்டு பிடிக்கப்பட்டு இறுதிக் கட்டப் பரிசோதனையில் இருப்பதாக அமெரிக்க மருந்து நிறுவனமான Pfizer/BioNTech ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் செல்வதைப் போன்று அடுத்த வருடம் ஏப்ரல் மாதமளவில் தடுப்பு மருந்து பாவனைக்கு வந்துவிட்டால் இந்தப் பிரச்சனையைச் சமாளித்து விடலாம்.
ஆனால், “கறுப்பர்களின் உயிர்களும் பெறுமதியானவை” என்ற இயக்கத்தின் செய்பாடுகளை முடிவிற்குக் கொண்டு வருவது எவ்வாறு? வெள்ளையின மேலாதிக்கச் சிந்தனை கொண்ட அமெரிக்காவில் காவல்துறையில் பணி புரிபவர்களின் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவருவது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. தன்னைக் கறுப்பர்களின் பிரதிநிதி எனச் சொல்லிக் கொள்ளும் கமலா இந்த விடயத்தை எவ்வாறு கையாளப் போகின்றார் என்பதில்தான் அவரது எதிர்காலம் தங்கியிருக்கின்றது. ஏற்கனவே அரசுத் தலைவராக இரண்டு தடவைகள் பதவி வகித்த பராக் ஒபாமாவினாலேயே இந்த விவகாரத்தில் பெரிதாக எதுவும் சாதித்துவிட முடியவில்லை.
அப்படியிருக்கையில், துணை அரசுத் தலைவரால் அதையும் மீறி ஏதாவது செய்துவிட முடியுமா? அது மாத்திரமன்றி அவர் அரச சட்டவாளராகப் பதவி வகித்த காலகட்டத்தில் காவல்துறை சார்ந்தே தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
கமலா முன்னுள்ள வாய்ப்புகள்
அமெரிக்க வரலாற்றிலேயே வயதில் அதிகமான அரசுத் தலைவராக ஜோ பைடன் விளங்குகிறார். 78 வயதில் அவர் அரசுத் தலைவர் ஆகிறார். இன்னும் 4 வருடங்களில் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் போது அவர் வயது 82 ஆக இருக்கும். அவ்வாறு அவர் மீண்டும் போட்டியிட விரும்பினாலும் கூட அவரது கட்சியோ, மக்களோ அதனை விரும்புவார்களா, அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. எனவே, அடுத்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிற்கப் போகின்றவர் கமலா ஹாரிஸே. (தனது பதவிக் காலத்தில் ஜோ பைடன் மரணமடைந்தாலோ அன்றி பதவியில் தொடர முடியாமல் நோய்வாய்ப் பட்டாலோ, தானாகவே கமலா அமெரிக்க அரசுத் தலைவர் ஆகிவிடுவார் என்பது வேறு விடயம்.)
இவ்வாறான வாய்ப்புகள் உள்ள நிலையில் கமலா அதற்கேற்பவே காய்களை நகர்த்துவார் என எதிர்பார்க்கலாம். அமெரிக்க அரசுத் தலைவராக இருப்பது அமெரிக்க வெகுமக்களின் அரசுத் தலைவராக விளங்குவதா அன்றி அமெரிக்காவின் பகாசுர பன்னாட்டு வணிக நிறுவனங்களின் முகவராக விளங்குவதா என்ற கேள்வி எழுகிறது. உலகையே பங்கு போட்டு வைத்துக் கொண்டு, மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில் தாம் நினைத்தவற்றையே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள், தமது தலைமையகத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவில் மாத்திரம் தமது நலன்களைத் தீர்மானிப்பதற்கு ஆட்சியாளர்களை அனுமதிக்கும் என எதிர்பார்ப்பது மடமை. அத்தகைய நிறுவனங்களைப் பகைத்துக் கொண்டு ஆட்சியில் தொடரவோ, அடுத்த தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்பதைத் தெரிந்து வைத்துள்ள கமலா, உலகெங்கும் நீதி கோரிப் போராடும் மக்களுக்குத் துணை நிற்பார் என எதிர்பார்க்க முடியுமா? எனவே, அவர் அடக்கி வாசிப்பதன் ஊடாகவே தனது அரசுத் தலைவர் தேர்தலுக்கான வாய்ப்பை உறுதி செய்துகொள்ள முடியும். அதனைச் செய்வதற்கான வாய்ப்பே பெரும்பாலும் உள்ளது.
அமெரிக்காவின் கொள்கை வகுப்பைப் பொறுத்தவரை யூதர்களின் செல்வாக்கு மிக அதிகமானது என்பது உலகறிந்த விடயம். கமலாவின் கணவர் யூதர் என்பதால் இனிவரும் காலங்களில் யூதர்களின் செல்வாக்கு இன்னும் அதிகமாகவே இருக்கும் எனலாம். இந்நிலையில், இஸ்ரேல் அரசாங்கத்தின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அமெரிக்கா முனைப்புடன் செயற்படக் கூடும். தற்போதைய தலைமை அமைச்சர் நெத்தன்யாஹூ விரும்புவதைப் போன்று ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தாலும் ஆச்சரியமில்லை.
கமலா ஹாரிஸ் அவர்களைப் பற்றி இன்று ஊடகங்களில் அதிகம் பேசப்படுகின்றது. அவரது இந்தியப் பின்னணி பற்றி இனவாதத்துடன் கூடிய சாடல்களும் அவற்றில் அடங்கும். போகிற போக்கில் அமெரிக்காவில் ஒரு இந்தியர் அரசுத் தலைவராகப் போகின்றார் என்ற எச்சரிக்கை ஒரு புறம். முதல் தடவையாக ஒரு யூதப் பின்புலத்துடன் கூடிய ஒருவர் அந்தப் பதவிக்கு வரப் போகின்றார் என்ற எச்சரிக்கை மறுபுறம்.
கமலாவின் மறுபக்கம்
அதேவேளை, கமலா தொடர்பான நேர்மறையான செய்திகளும் அதில் அடக்கம். அவர் ஒரு சட்டத்தரணி என்பதை நாமறிவோம். அவர் ஒரு இரக்க குணமற்ற சட்டவாளர் என்கின்றனர் அவரது விமர்சகர்கள். அவர்கள் எடுத்துக் காட்டாக முன்வைக்கும் புள்ளிவிபரங்கள் இவை. கலிபோர்ணியாவில் கமலா மாவட்ட சட்டவாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில் மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குத் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கை 50 வீதத்திலிருந்து 76 வீதமாக உயர்ந்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் 65 வீதமாக இருந்த போதைவஸ்து கடத்தல்காரர்கள் தொடர்பிலான வழக்குகள் இரண்டு வருட காலகட்டத்தில் 76 ஆக உயர்ந்துள்ளது.
சட்டவாட்சியில் நம்பிக்கை கொண்ட ஒருவர் கமலா என இதனைப் புரிந்து கொள்ளவும் முடியும். ஆனால், அவரது பதவிக் காலத்தில் மன்னிப்பு, பரிதாபம் என்பவற்றுக்கு இடமிருக்கவில்லை என்பதே விமர்சகர்கள் கருத்து. அது மாத்திரமன்றி நீதியை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை வழங்காமல், சந்தர்ப்ப வசத்தால் குற்றஞ்சாட்டப் படுபவர்களுக்குக் கூட தண்டனை பெற்றுத் தருவதிலேயே குறியாக இருந்தார் என்கின்றனர். அவரது பதவிக் காலத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னைநாள் கைதிகள் தொழில்களைத் தேடிக் கொள்வதற்கான திட்டங்களை ஊக்குவித்த அவர் மறுபுறம், சிறையில் உள்ள கைதிகள் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளுக்குக் கதவடைப்புச் செய்தார். அது அவரது இரட்டை மனநிலையை உணர்த்துகின்றது என்கின்றனர் விமர்சகர்கள்.
கமலாவின் சாதனைகளுள் ஒன்று நிரபராதியான Jamal Trulove ஐச் சிறைக்கு அனுப்பியது. தனது நண்பரையே கொலை செய்தார் என்கின்ற பொய்யான குற்றச்சாட்டின் கீழ் 50 வருட சிறைத் தண்டனைக்கு ஆளாகிய அவர் ஆறு வருடங்களை சிறையில் கழித்ததன் பின்னர் விடுவிக்கப் பட்டார். அவருக்கு நட்ட ஈடாக 13.1 மில்லியன் டொலரும் வழங்கப் பட்டது. கமலாவின் பெயர் – துணை அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பில் – ஊடகங்களில் அடிபடத் தொடங்கிய போதில் Jamal Trulove ஊடகங்களில் கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு எதிராக காவல்துறையால் சோடிக்கப்பட்ட வழக்கிற்குப் பொறுப்பாக கமலா அவர்களே விளங்கினார். எனக்கு 50 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதில் என்னைப் பார்த்து ஒரு குரூரச் சிரிப்பை அவர் உதிர்த்தார். அது மாத்திரமன்றி, எனக்கு எதிராக பொய்ச் சாட்சியம் அளித்தவருக்கு 60,000 டொலர் வெகுமானம் வழங்கியும் உத்தரவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
சன் பிரான்சிஸ்கோ பல்கலைக் கழக சட்டத்துறைப் பேராசிரியர் Lara Bazelon நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் எழுதும் போது இவ்வாறு கூறுகிறார். “மாவட்ட சட்டவாளராக இருந்த போதிலும் சரி, மாநில சட்டமா அதிபராக இருந்த போதிலும் சரி கமலா குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றங்களை இட்டுக்கட்டுவதிலேயே குறியாக இருந்தார். பொய்ச் சாட்சியங்களை ஊக்குவித்தார். அவருக்கும் அவரது பதிவுகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உள்ளன.”
இவை கமலாதேவி ஹாரிஸ் தொடர்பான ஒருசில பதிவுகளே. தேடத்தேட அலிபாபா குகையைப் போல தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது.
அமெரிக்காவின் 47 ஆவது அரசுத் தலைவராக ஆசை கொண்டு, அதற்கான பாதையில் பயணிக்கும் ஒருவர் தனக்கு எதிரான விமர்சனங்களை புறங்கையால் ஒதுக்கிவிடும் வல்லமை மிக்கவர் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், இத்தகைய இரட்டை முகம் கொண்டவர் ஒருவரை நம்மவர் என்று ஒத்துக் கொள்வதுதான் கடினமாக உள்ளது. இவர் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவார் என நம்புவது வேடிக்கையே.