கண்மணியே பேசு!

கண்மணியே பேசு!

பாகம்: ஐந்து

வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்புகையில் வழியே இருந்த பூங்காவின் அமைதியும் அழகும் அவள் மனதை கொள்ளை கொள்ள அப்பூங்காவின் ஊடாக நடக்கலாமென்ற எண்ணத்தில் அப்பூங்காவின் வாசலை நோக்கி நடந்தாள்.

அவளது மனம் வழமை போலவே மலர்களைக் கண்டவுடன் பாடத் தொடங்கியது.

ஆயிரம் மலர்களே மலருங்கள்…

அமுத கீதம் பாடுங்கள்… ஆடுங்கள்…

நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்

ஆயிரம்… மலர்களே… மலருங்கள்…

பூங்காவின் மணல் மேடுகளில் நடக்க முற்பட்டபோது அவளுக்குத் தன் தாயகமும் அயல் அட்டைகளும் கோவிலும் குளமும் என எல்லாமும் மனத்திரையில் ஓடத் தொடங்கின.  எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும் சில நினைவுகள் எம்முடனேயே தங்கிவிடுகின்றன. சம்பவங்களில் முக்கியத்துவம் எதுவும் இல்லா விட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட நாளின் இருப்பு எம்மை மிதமாகவே பாதித்திருக்கிறது என்பது வியப்பாக இருந்தது அவளுக்கு. அதே நேரம் திடீரென மின்னலாய் இரண்டு சம்பவங்களை இணைத்துப் பார்க்கும் ஒரு அதிர்வு அவளில் உண்டாக அவள் பல வருடங்களின் முன்னே கடந்து போன  அந்த நாளைத் திருப்பியும் பார்த்தாள். அவன் தான் இவனா? அதனால்த் தான் அவனுக்கு தன் மீது ஈர்ப்பு உண்டானதா? அதே கண்கள், அதே நிறம், வருடங்கள் ஓடியதில் வயதுக்கேற்றாற்போல் உடம்பில் மாற்றம், எல்லாம் இது அவன் தான் என்பதை சிறிது சிறிதாக அவளுக்கு உறுதிப்படுத்துகிறதா?  நினைவுகள் ஊரோடு உறவாடின..

**********************************************************************************************

மணல் அலைகள் பரந்திருந்த காணிகளெல்லாம் சோழகக் காற்றின் சுழற்சியில் சிறியதும் பெரியதுமான மணற்  குவியல்களைப் பிரசவித்திருந்தன. காற்றில் ஊடுருவியிருந்த காட்டுப்பூக்களினதும் ஈச்சம் பழங்களினதும் வாசனை அவளது நாசியெங்கும் துளைத்து நெஞ்சை ஊடுருவி இருந்தது.  அவள் செருப்புகளில்லாத சுத்தமான பாதங்கள் அம்மணல் மேடுகளையும் பள்ளங்களையும் பரிவோடு ஸ்பரித்தவாறே  முன்னோக்கி நகர்ந்தன. அம்மன் கோவிலின் மணியோசை இதமான ரீங்காரமாய் அவள் காதுகளைத் தட்டிய போது தான் அவள் சுயநினைவுக்கு மீண்டாள். அதே வேளையில் அவள் தன்னையறியாமல் இயற்கையின் அழகை ரசித்தவாறே அந்தக் கற்கல் நிறைந்த மணல் வீதிக்கு வரவும் அவளைத் தாண்டியவாறே நான்கைந்து விடலைகள்  கடந்து செல்லவும் சரியாக இருந்தது.

“சைக்கிளை பார்த்து ஓட்டடா, யாரையும் பார்த்துக் கொண்டு வேலீக்கிள்ள விடாதயடா!” என்ற நண்பனின் கிண்டலுக்குப் பதில் கொடுத்தவனை அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

“நாங்கள் எல்லாம் பார்த்துத் தான் ஒட்டிறம், ரோட்டில வாறவை எல்லோ பார்த்து வரவேணும்!” சொல்லியவாறே அவளைக் கடந்து சென்றவனின் முகமும் அவளையே பார்த்த அந்தக்கண்களும் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு நின்ற அந்த இளம் சிவப்பு நிறமும் அவள் நெஞ்சில் நீண்ட நாட்களுக்கு நின்று போனது.

அவள் தன் கல்வியை வீட்டிலிருந்து  தூரமாக இருந்த தங்கிப் படிக்கும் பள்ளியொன்றில் தொடர்ந்ததில் ஊருக்கு வரும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருந்தன.

 

அந்த விடலைப் பையனைக் காணவோ அவனை நினைப்பதற்கோ சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவாகவோ இருந்ததில் இரண்டாவது தடவை அவனைக் காண்கையில் அவள் பயணித்த சொகுசு வண்டியில் அவனும் ஏறியதும் அவனுக்கேற்றார்ப் போல் பாடலொன்றும் வருகையில் அவள் மனசு லேசாக அசைந்ததென்னவோ உண்மை தான்…

வைகைக் கரை காற்றே நில்லு…

வஞ்சி தன்னைப்  பார்த்தால் சொல்லு..

வைகைக் கரை காற்றே நில்லு…

வஞ்சி தன்னைப்  பார்த்தால் சொல்லு…

மன்னன் மனம் மாறுதென்று…

மங்கை தனைத் தேடுதென்று…

காற்றே… பூங்காற்றே…

என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…

காதோடு போய்ச் சொல்லு…

அவளது பள்ளித் தோழிகள் பலரும் அவன் யாரெனக் கூறியதை அவள் கேட்டும் கேளாததுமாகக் கடந்திருக்கிறாள். அவனது அமைதியான குணத்திலும் அழகிலும் அவளது வயதுக்கேற்ற சிறு தென்றல் ஒன்று அவள் இதயத்திலும் இதமாக வீசித்தான் இருந்தது.

அதெல்லாம் ஒரு காலமாகக் கனவோடு கனவாகக் கரைந்தே போனது.  குறைந்தது இருபது இருபத்தியைந்து ஆண்டுகளின் பின் என்னை அடையாளம் கண்டே தான் தன்னை அறிமுகம் செய்து கொண்டானா? அவளுக்கு அவள் பால்ய காலத்து நினைவுகள் உவகையாக இருந்தது. பல கேள்விகளும் விடைகளுமாக அவள் மனதில் சின்னதாய் ஒரு சந்தோசம் சிறகடித்துப் பறந்தது.

கண்மணியின் மனசிலும் இப்போது திடமாகச் சிட்டுக்குருவியொன்று சிறகடிக்கத் தொடங்கியது…

Leave A Reply

Your email address will not be published.