23இல் பாடசாலை மீள ஆரம்பமா? நடக்கின்றன உயர்மட்டப் பேச்சுகள் கல்வி அமைச்சு தெரிவிப்பு.

23இல் பாடசாலை மீள ஆரம்பமா?
நடக்கின்றன உயர்மட்டப் பேச்சுகள்
கல்வி அமைச்சு தெரிவிப்பு
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கல்வி அமைச்சு மட்டத்தில் உயர்மட்டப் பேச்சுகள் நடக்கின்றன.
அதேவேளை, மாகாணக் கல்வி அமைச்சுகள், வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடனும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு பேச்சுகளை நடத்தி வருகின்றது.
சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக அமுல்படுத்தி எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன எனக் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
எனினும், கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைவடையாமல் இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு குறித்த திகதியில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா என்பது தொடர்பில் பேச்சுகள் நடக்கின்றன.
இந்தத் தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளிலேயே ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சைகள் நடைபெறும் எனவும் அவர் மேலும் கூறினார்.