நெருக்கடிக்கு மத்தியிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை! – அமைச்சர் சான் நிஷாந்த தெரிவிப்பு.
நெருக்கடிக்கு மத்தியிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை! – இராஜாங்க அமைச்சர் சான் நிஷாந்த தெரிவிப்பு
“கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு நெருக்கடியான சூழ்நிலையிலும் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. எனவே, எதிர்த்தரப்பினர் பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”
– இவ்வாறு கிராமிய மற்றும் பிரதேச குடிதண்ணீர் வழங்கல் கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் சான் நிஷாந்த தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு இலங்கையில் ஆட்சியில் இருப்பது ஐக்கிய தேசியக் கட்சி அரசா? ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசா? அல்லது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசா? எனத் தெரியாது. உலக வல்லரசு நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூட கொரோனா வைரஸின் தாக்கம் பிரதான காரணியாக அமைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு நெருக்கடியான சூழ்நிலையிலும் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இவ்வாறு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் எதிர்த்தரப்பினர் குறைபாடுகளை மாத்திரம் காண்கின்றனர். எவ்வித ஒத்துழைப்பும் வழங்கவில்லை.
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வெகுவிரைவில் இந்த நெருக்கடி நிலையை வெற்றிகொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.