பானகமுவ அந் நூர் மத்திய கல்லூரி மாணவன் 199 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
வெளியான ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் குருநாகல் மாவட்டத்தில் பானகமுவ அந் நூர் மத்திய கல்லூரி மாணவன் 199 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் பானகமுவ அந் நூர் மத்திய கல்லூரியின் மாணவனான முஹமட் அனீஸ் மித்ஹான் என்ற மாணவனே 199 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவன் குறித்து பாடசாலை அதிபர் ஏ. எஸ். எம். இர்சாட் கருத்து தெரிவிக்கையில்
இம்முறைவெளியான புலமைப் பரிசில் பரீட்சையில் 15 பிள்ளைகள் சித்தியடைந்துள்ளனர். தமிழ் மொழி மூலமாக 199 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை மித்ஹான் என்ற மாணவன் பெற்றுள்ளார். இவரது தந்தை ஒரு பட்டதாரி. தாய் ஓர் ஆசிரியை. இந்த மாணவன் திறமை மிக்க மாணவன். ஆரம்பத்தில் இருந்தே ஒரு சிறந்த பெறுபேற்றைப் பெறுவார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். இவர் கற்றல் நடவடிக்கைகளிலும் சரி இணைப்பாட விதான நடவடிக்கைகளிலும் சரி மிகவும் திறமையாகச் செயற்பட்ட ஒரு மாணவன். நல்ல ஒழுக்கம் உடையவர். அனைத்து விடயங்களையும் சிறந்த முறையில் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்.
அதே போன்று வகுப்பாசிரியர்களும் தங்களுடைய பங்களிப்புக்களைச் செய்துள்ளார்கள்.
குறிப்பாக கொரோனா தொற்றுக் காரணமாக மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தூர கல்வி முறை மூலமாக ஒன்லைன் வசதியினூடாக தங்களுடைய கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வகையில் இம்மாணவன் இதைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு அந்நூர் மத்திய கல்லூரிக்கும் பானகமுவ கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவனின் தாய் ஆசிரியை. எம். என். எப். முவ்சியா கருத்து தெரிவிக்கையில்
எனது மகள் சுய கற்றலிலும் தேடலிலும் மிக ஆர்வம் கொண்டவர். இதுவே இவரது முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். எனது மகனுக்கு சிறந்த ஆசிரியர் வழிகாட்டல்கள், அதிபரின் சிறந்த உதவிகள் கிடைத்தன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வகுப்பாசிரியை ஐ. எஸ். புத்தூரா கருத்து தெரிவிக்கையில்
இம்மாணவன் மிகவும் ஒழுக்கமுடையவர். சுய கற்றலில் ஆர்வம் உடையவர். தம் பாடங்களை முறையாக திறன்படச் செய்பவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவன் முஹமட் அனீஸ் மித்ஹான் கருத்து தெரிவிக்கையில்
நான் 199 புள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கொரோனா தொற்றுக் காலத்தில் கல்வி கற்பதற்கு உதவி செய்த அதிபர் ஆசிரியைகளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எதிர்காலத்தில் வைத்தியராக வர விரும்புகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி